நீத்தார் பெருமை

By நா.இ.ஈசுவரன். on Feb. 10, 2021

Card image cap

நீத்தார் பெருமை
அமரர் தம்பிமுத்து கதிரமலை
அமரர் தம்பிமுத்து கதிரமலை அவர்கள் 1945 ல் இடைக்காட்டில் ஓர் விவசாய குடும்பத்தில்
இரண்டாவது மகவாகவும் மூத்த மகனாகவும் பிறந்தார், போதிய நிலபுலன்கள் இன்மை,
சகோதரர்களின் வருகை போன்றவற்றால் அவர்களின் வாழ்க்கை நடுத்தர வர்க்க
வாழ்க்கையாகவே இருந்தது, திரு தம்பிமுத்து கதிரமலை அவர்கள் தனது கல்வியை இடைக்காடு
மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரணம் வரை கற்று பின் அதற்கு மேல் கற்கவேண்டுமாயின்
அயலூர் பாடசாலைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதாலும், குடும்பத்தின் மூத்தமகன்
என்பதாலும் தனக்கு பின்னால் இருக்கும் சகோதரர் நலன் களுக்காகவும் தனது கல்வியை
விடுத்து தந்தையாரின் விவசாய தொழிலுக்கு உதவத் தொடங்கினார், அன்றைய கால கட்டத்தில்
அவர் ஏதாவதொரு அரசாங்க வேலையொன்றினை பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை இருந்த
போதிலும் அதற்கும் அவர் முயற்சிக்கவில்லை.
இவர் எனது தந்தையாரின் சகோதரியின் பேரனாவார், அவரின் தாயார் எனது
தாயின் மீது மிகுந்த அன்பும் பாசமுமுடையவர்.அதனால் அடிக்கடி எமது தாயாரை சந்திக்க
வருவதுடன் எந்த விடயமாயினும் எனது தாயின் ஆலோசனை பெற்றுத்தான் செய்வது வழக்கம்,
அதனாலும் நெருங்கிய உறவினர் என்பதாலும் எனக்கும் அவர்களுடன் நல்ல உறவு இருந்தது.
ஆயினும் அவர் என்னைவிட வயதில் மூத்தவர் என்பதல் நான் அவரை எப்போதும் அண்ணா
என்றே அழைப்பது வழக்கம்,
இவர் தனது இளமைக்காலத்தில் தந்தையாருக்கு உதவுவதுடன் நண்பர்களுடன் சேர்ந்து
தோட்ட வேலைகளுக்குச் செல்வது வழக்கம், அதனால் அவர் விசுவமடு படித்த வாலிபர் திட்டம்
உருவானபோது முதல் தொகுதி வழங்கலில் அவரது நண்பர்களுடன் ஒரே தெருவில் காணியை
பெறக்கூடியதாக இருந்தது. அவரின் இளமைக்கால விவசாய முயற்சியினால் விசுவமடுவில்
மிளகாய் செய்கையில் நல்ல பயன் கிடைத்தது, அதன் பயனாக அவர் தனது சகோதரர்களுக்கு
நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடிந்தது
. அவர் அந்த வருவாயைக் கொண்டு பாவித்த பார ஊர்தி ஒன்றைக் கொள்வனவு செய்து அதில்
கொழும்பிற்கான பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலை ஆரம்பித்தார். தொழில் நேர்மை,
நேரம் தவறாமை, மக்களுடன் பழகும் முறை ஆகியவற்றால் அவரின் தொழில் மிகவும் சிறப்பாக
மேலோங்கியது .பின்னர் அவர் புதிதான பார ஊர்திகளை வாங்கி தொழில் செய்யத்
தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர் மூன்று பார ஊர்திகளை வைத்து தொழில் செய்தமை
அவரின் திறமைக்குச் சான்றாகும், இடைக்காட்டில் முதல் பார ஊர்தி சேவையை
தொடங்கியவரும் அவரே.
இறை பக்தியில் அவரின் குடும்பம் சிறந்து விளங்கியது, அவரின் தந்தையார் விவசாயம்
செய்தபோதும் கொட்டடி வைரவர் ஆலய திருவிழாவில் தனது பங்களிப்பாக மேளக்கச்சேரி
ஒன்றினை வழங்குவதுடன் அன்னை புவனேஸ்வரி ஆலயத்திலும் மிகுந்த சேவையினை
வழங்குவதனை நான் கண்டிருக்கிறேன், அவரை தொடர்ந்து அவரின் மகனான கதிரமலை
அவர்களும் கொட்டடி ஆலய வளர்ச்சியிலும் இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலய
வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயலாற்றி வந்துள்ளார், அவரது பார ஊர்தி கொழும்பிற்கு
செல்வதற்கு முன் கொட்டடி வைரவர் ஆலயத்தில் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி
வைரவரை வணங்கித்தான் வண்டியை அனுப்புவார், வருடந்தோறும் அன்னை புவனேஸ்வரியின்
மகோற்சவத்திலும்,கொட்டடி ஆலய திருவிழாவிலும் தனது பங்களிப்பை நல்குவதுடன் நேரில்
சென்று அதனை நடாத்துவதும் அவரது வழக்கமாகும், கதிர்காமத்தில் பறவைக்காவடி எடுத்து
பின் கொட்டடி ஆலயத்தில் இருந்து செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கும் பலமுறை
பறவைக்காவடி எடுத்து தனது நேர்த்திக்கடனை நிறைவு செய்துள்ளார், பலமுறை தனது பார

ஊர்தியில் இடைக்காட்டில் இருந்து எம்மவர்களை கதிர்காம திருவிழாவிற்கு அழைத்துச்
சென்றுள்ளார், கனடா வந்தபின்பும் ஒவ்வோர் வருடமும்புவனேஸ்வரி அம்மன் திருவிழா
,பொங்கல், கொட்டடிவைரவர் திருவிழா கதிர்காமம், செல்வச் சந்நிதி திருவிழாக்களுக்கு செல்ல
தவறுவதில்லை. சென்ற 2019 ம் ஆண்டு அவருடன் நாம் கதிர்காம திருவிழாவிற்குச் சென்றது
எமக்கு கிடைத்த அரும்பெரும் பாக்கியமாகும்,
1990 ல் எம்மவர்கள் இடம் பெயர்ந்து மற்றைய ஊர்களில் வாழ்ந்தபோது எம்
சிறார்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாதென்பதற்காக இராணுவ நெருக்கடிகளுக்கிடையிலும்
தனது பார ஊர்தி மூலம் பலமுறை இடைக்காடு மகா வித்தியாலயத்தில் இருந்து
மாணவர்களுக்கான மேசை கதிரைகளை ஏற்றிக் கொண்டுபோய் நீர்வேலி சேர்த்து மாணவர்
கல்விக்கு மிகப் பெரும் சேவையாற்றியுள்ளார்,. கனடா வந்த பின்னும் தனது ஊரை மறக்காது
அங்கு நடைபெறும் வேலைத் திட்டங்களுக்கான தனது பங்களிப்பினை வழங்க தவறுவதில்லை.
இடைக்காடு மக்கள் நலன் புரிச் சங்க செயற்பாடுகளுக்கு பெரிதும் உறு துணையாக
இருந்துள்ளார். தனது இறுதிக் காலத்திலும் இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின்
பாதுக்காப்பைக் கருத்திற் கொண்டு அங்கு பாதுகாப்பு கமரா பொருத்தும் பணியை
தொடங்கியிருந்தார், அப்பணி முடிவதற்கு முன் அன்னை புவனேஸ்வரி அவரை தன்னுடன்
அழைத்துக் கொண்டாள். எனினும் அவர் தொடங்கிய பணியை அவரின் குடும்பத்தினர் சிறப்பாக
நிறைவு செய்து கொடுத்துள்ளனர்,
அமரர் கதிரமலை அவர்கள் தனது நான்கு பிள்ளைகளுக்கும் உரிய வாழ்க்கைத்
துணைகளை இணைத்து நல்லதோர் இல்லற வாழ்வைக் கொடுத்து அதன் பயனாக பத்து
பேரப்பிள்ளைகளுடன், வாழ்ந்து தனது பேத்தியின் பூப்புனித நீராட்டுவிழாவையும் சிறப்பாக
நடாத்தி , தான் இந்த வையகத்தில் பிறந்த பயனை ஆற்றி பின் இறையருளை அடைந்துள்ளார்.
அவர் கனடா வந்தபின் புவனேஸ்வரி அம்மன் கோவில் தொடர்பாகவும் மக்கள் நலன் புரிச் சங்க
செயல்பாடுகளில் அவரின் அக்கறையின் பயனாகவும் எனக்கும் அவருக்கும் நல்லதோர் புரிதல்
இருந்தது, என்னுடன் இரண்டு நாட்களுக்கு ஒருதடவை தொலைபேசியில் பேச தவறுவதில்லை,.
அவரின் மறைவு எனக்கு மிகுந்த துயரையே கொடுத்துள்ளது,
அன்னாரின் ஆன்மா சாந்திபெற அவருக்கு பிடித்தமான அன்னை புவனேஸ்வரியின் பாதம்
பணிந்து அன்னையின் இறையருளை வேண்டிநிற்போம்.
ஒம் சாந்தி ! ஓம் சாந்தி!.
தோன்றின் புகழோடு தோன்றுக! அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. ---------- திருவள்ளுவர்.