நிகழ்வுகளின் நினைவுகள்

By நா.இ.ஈசுவரன் on Sept. 14, 2020

Card image cap

நிகழ்வுகளின் நினைவுகள் ;
இடைக்காடு சனசமூக நிலையம் --- வெதுப்பி ( பாண் ) விநியோகம் ---- 1974
எமது கிராமமான இடைக்காடு
ஓர் விவசாய கிராமமாகும். எம் முன்னோர்கள் அக்காலத்தில் தமது உணவுத் தேவைக்காக குரக்கன் சாமை,,தினை ,மரவள்ளி,, வரகு போன்ற பயிர்களை செய்து வந்தனர். இப்போது பயிர் செய்யப்படாது கால்நடைகள் மேயும் தரவையாக காணப்படும் ஆவரம்புலம், கிராஞ்சி, சாமித்திடல் மயானத்திற்கு மேற்குப் புறமாக உள்ள சாங்காணி போன்ற இடங்களில் வரகு செய்கை பண்ணப்பட்டதாக எனது பாட்டனார் எமக்குச் சொன்னதுண்டு. நாம் பார்க்கின்ற காலங்களில் அவ்விடங்களில் வரப்புக்களும் நீர்பாய்ச்சலுக்கான தடங்களும் காணப்பட்டன, பின்நாளில் தோட்டங்களுடன் சார்ந்த வயல்களில் நெற் செய்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிற்கான புகையிலை சந்தைப்படுத்தல் வசதி கிடைத்ததால் பணப் பயிரான புகையிலை செய்கையில் ஈடுபட்டார்கள் .எனது பாட்டனார் புகையிலை செய்கை பண்ணி அதனை பதப்படுத்தி யாழ் நகருக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடம் அதனை விற்று வந்ததை நான் கண்டுள்ளேன், அப்போது அவை தென் இந்தியாவிலுள்ள மலையாளம் என்ற கேரளா விற்கு அதனை ஏற்றுமதி செய்ததால் அதனை மலையாளம் புகையிலை என்றே சொல்லி வந்ததை நான் அவதானித்திருக்கிறேன்,
எனக்குத் தெரிந்த காலங்களில் அதாவது 1965 களில் என நினைக்கிறேன் வெண்காயம் , காய்ந்தமிளகாய் என்பவற்றிற்கான சந்தை வாய்ப்புக்கள் ஏற்பட்டதால் எம்மவர்கள் பணப் பயிரான வெண்காயம் ,மிளகாய் என்பவற்றை பிரதான பயிராக செய்கை பண்ணத் தொடங்கியதால் உணவுப் பயிர்களின் செய்கை குறைவடைய தொடங்கியது.
1972 ல் நான் முழுநேர விவசாயியாக இறங்கியபோது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இலங்கையின் அரசுக்கட்டிலில் அமர்ந்திருந்தது.அப்போது பிரதமராக திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரும் நிதி அமைச்சராக கலாநிதி என். எம் .பெரேரொ அவர்களும் பதவி வகித்தனர், அந்த நேரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அந்நியச் செலாவணி மிகுந்த பற்றாக் குறையாக இருந்தது. எனவே நிதி அமைச்சரான என்.எம். பெரெரோ அவர்கள் பெரும்பாலான பொருட்களுக்கு இறக்குமதி தடைகளை போட்டார், அதனால் உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அவற்றிற்கு நல்ல சந்தை வாய்ப்பு கிடைக்கும் என்றார், அப்படியே எமது விவசாய உற்பத்திகளான வெண்காயம், மிளகாய் என்பனவற்றிற்கு நல்ல விலை கிடைத்தது, அக்காலத்தில் தான் எம்மூரில் உள்ள ஓலைக் குடிசைகள் யாவும் ஓடு வேய்ந்த கல் வீடுகளாக மாறின, ஆனால் உணவுப் பொருட்களுக்கு பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உடனடியாக உணவுப் பயிர்களை போதிய அளவிற்கு உற்பத்தி செய்ய முடியவில்லை. அதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது.
அதற்கிடையில் கோதுமை மாவிற்கான இறக்குமதி குறைக்கப்பட்டதால் மக்கள் பாவனைக்கு கோதுமைமாவின் அளவு கட்டுப்படுத்தப் பட்டது. வெதுப்பி ( பாண் ) உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் குறிக்கப்பட்ட அளவில் விநியோகம் செய்யப்பட்டது. அதன் மூலம் வெதுப்பி உற்பத்தி செய்யப்பட்டு வாரத்தில் 2-3 நாட்கள் மட்டும் விற்கப்பட்டது. அப்போது எமதூரில் வெதுப்பி உற்பத்தி செய்யப்படுவதில்லை, எனவே எம்மவர்கள் அச்சுவேலிக்கு சென்றுதான் வாங்க வேண்டிய நிலை. அங்கு இரண்டு வெதுப்பி தயாரிப்பாளர்கள் இருந்தார்கள் . 1, லட்சுமி பேக்கரி என்றும் மற்றது கூட்டுறவு பேக்கரி எனவும் இருந்தது, எம்மவர்கள் காலையில் அங்கு சென்றால் இவர்கள் போவதற்கு முன்னால் அவையாவும் விற்று முடிவடைந்து விடுவதால் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் எம்மவர்கள் மிகுந்த சிரமத்திற்காளானர்கள். எனவே இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டிய பொறுப்பு இடைக்காடு சன சமூக நிலையத்திற்கு ஏற்பட்டது,
1974 ல் இடைக்காடு சனசமூக நிலையத்தின் தலைவராக திரு செ. வல்லிபுரம் (வாரியவளவு) அவர்களும் செயலாளராக நானும் நியமிக்கப்பட்டோம், அந்த செயற் குழுவிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. தலைவரான வல்லிபுரம் அவர்கள் அரச சேவையில் யாழ் மாவட்டத்தில் கடமைஆற்றியதாலும். கோப்பாய் பிரதேசிய செயலகத்தில் அலுவலக மேலாளராக எமதூரை சேர்ந்த வை, வல்லிபுரம் அவர்கள் கடமையாற்றியதும் எமக்கு பெரிதும் உதவியாக இருந்தது. சன சமூக நிலையத்தின் பெரு முயற்சியால் எமது கிராமத்திற்கு வாரத்தில் இரு நாட்கள் அச்சுவேலியில் உள்ள இரு வெதுப்பி நிறுவனங்களிலும் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எமக்கு வெதுப்பி வழங்க அனுமதி கிடைத்தது, ஆனால் அவற்றை கொண்டுவந்து வழங்கும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது,
எனவே வாரத்தில் இரு நாட்கள் அதிகாலை 5 -00 மணிக்கு நாம் சிறிய உழவு இயந்திரத்தில் போய் இரு பேக்கரிகளிலும் வெதுப்பியை எடுத்து வந்து சன சமூக அறையில் வைத்துவிட்டு எமது தோட்டத்திற்கான நீர்ப்பாய்ச்சல் போன்ற வேலைகளை முடித்து விட்டு வந்து காலை 11-00 மணியளவில் பங்கீட்டு அட்டைக்கு பங்கீட்டளவில் விநியோகித்து வந்துள்ளோம். எம் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஒழுங்காக பெற்று எமக்கு சிறந்த ஒத்துழைப்பினை வழங்கியமை இங்கு குறிப்பிட்டாக வேண்டும், வாரத்தில் இருமுறை வெதுப்பியை வழங்கினாலும் அது ஓரளவிற்கு எம்மக்களுக்கு உதவியாக இருந்தது, சிலர் இதனை பெற்றுக் கொள்ளாது விட்டதனால் அதிக எண்ணிக்கையுள்ள உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களுக்கு அதனை வழங்க முடிந்தது. அந்த நேரத்தில் மக்களுக்கு மிக அவசியமான தேவையானதொன்றாக இருந்தபடியால் மக்கள் சனசமூக நிலையத்தின் சேவையை பாராட்டியதுடன் நிலையத்தின் நிதி சேகரிப்பின் போதான வெண்காய சேகரிப்பின்போது மிகுந்த ஆர்வமுடன் வெண்காயத்தை சனசமூக நிலையத்திற்கு மனமுவந்தளித்தனர்.இந்த வெதுப்பியை ஏற்றி வருவதற்கு இருசக்கர சிறிய உழவுஇயந்திரம் வைத்திருந்த பலரும் கட்டணமின்றி பணியாற்றியுள்ளார்கள் அவர்களில் எல்லோருடைய பெயரும் எனக்கு ஞாபகத்தில் இல்லையெனினும் திரு க, தங்கவேல், திரு மு. கிருஸ்ணகுமார் ( சந்திரமணி) அவர்களுடன் நானும் செய்திருக்கிறேன். அப்பணியில் ஏடுபட்ட மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
பின்நாளில் இடைக்காட்டிலும் திரு சு ,இ, கந்தசாமி அவர்களால் வெதுப்பகம் அமைக்கப்பட்டு வெதுப்பி வழங்கப்பட்டது, நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களினால் இன்று அவையாவும் தடைப்பட்டுள்ளமை வருத்தத்திற்குரியவையே!
’ தனியொருவனுக்கு உணவு இல்லையெனில் ?...........................பாரதியார்.
நா.இ.ஈசுவரன்
கனடா.