நம்பிக்கை இருந்தால் தோல்வி எங்களை விட்டு ஓடும்

By நா. மகேசன் கனடா on July 1, 2026

Card image cap

நம்பிக்கை இருந்தால் தோல்வி எங்களை விட்டு ஓடும்
தோல்வியை நினைத்தால் நம்பிக்கை எங்களை விட்டு ஓடும்.
நீதிக்கும் அநீதிக்கும் போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். அதேபோல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். ஏன் நீதியை நிலைநாட்ட, தர்மத்தை நிலை நிறுத்த போர் என்றால் நாட்டிலோ, விட்டிலையோ இழப்பும் துக்கமும்தான். மனப்போராட்டத்தால் இழப்புக்களையும் எதிர்ப்புக்களையும் தவிர்க்க முடியாது. இவைகளை நினைத்துக் கவலைப்படக் கூடாது. இவைகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். எங்கள் மனதையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தினால் இழப்பைக் குறைக்கலாம்.
நல்ல காரியங்கள், கருமங்களைச் செய்யும்போது, போராட்டத்தையும் எதிர்ப்புக்களையும் தடுக்கும் முயற்சி முக்கியமானது. பொது நோக்கில் மனதை நிலை நிறுத்துவது, மற்றவர்களின் அபிப்பிராயங்களை செவிசாய்த்து, அவர்களின் ஆதரவுடன் பணிகளைச் செய்வது, எல்லோரது மனதை ஒருவழிக்கு கொண்டு வருவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. இதனைக் கண்டு அறிவதும் கடைப்பிடிப்பதும் கடினமானது அல்ல. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்கிறோம், முயற்சி செய்கின்றோம். வெற்றி கிடைக்கும்வரை ஓய்ந்து இருப்ப்து இல்லை. சிறு வெற்றி கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைகின்றோம். ஆனால் தொடர்ந்தும் விடா முயற்சி எடுக்க வேண்டும். நம்பிக்கை என்பது முழுமையாக இருக்க வேண்டுமே தவிர அரை குறையாக இருக்கக்கூடாது.
நம்மால் இயலாது என்று ஒதுங்குவதைக் கைவிட வேண்டும், எதையும் என்னால் செய்ய முடியும், வெற்றி அடைய முடியும் என்ற எண்ணம் மனதில் திண்ணமாக இருக்க வேண்டும். மனதைக் கட்டுப்படுத்த முடியாது அது தவித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தால் அதைக் கட்டுப்படுத்தி விடலாம். மன அலைகளை தடுத்து நிறுத்த முடியாது, அதற்கு அணையும் கட்ட முடியாது. இது கடலில் தோன்றும் அலை போன்றது. ஆனால் நம்பிக்கை என்ற சுவரால் அதனைத் தடுத்து நிறுத்தி வெற்றி காணலாம்.
மனமில்லாத மாமியாராக அரைகுறை மனதுடன் செயலில் இறங்கக்கூடாது. மனம் இருந்தால் வெற்றி உண்டு இதை மனதில் பதிய வைத்து இருக்க வேண்டும். மனதை அப்படி செயல்படவைக்க அதைப் பழக்க வேண்டும். மனதைக் கட்டுப் படுத்தி அதை வலிமையடையச் செய்ய சிறந்த வழி தியானம். ஆனால் தியானத்தில் இருந்து கொண்டு மனதை அலைபாய விடக்கூடாது
நமக்கோ பிறருக்கோ நன்மை தராத செயலை செய்யக்கூடாது, இதை தவிர்த்துக் கொள்வது எல்லோருக்கும் பயன்பாடாக அமையும். இதை நாங்கள் கடைப்பிடித்தால் எங்களுக்கு இது பழக்கப்பட்டுவிடும். எமது விருப்பங்களாலே சில எதிர்மறையான பழக்கங்கள் ஏற்படுகின்றன. இவைகளைக் குறைத்துக் கொள்வது மன அமைதியைத் தரும்.
ஒரு பொருளை வெறுக்கும்போது அதன் பயன்பாட்டையும் மறக்க வேண்டும்.
யாரை நாங்கள் நேசிக்கின்றோமோ அவரை பிரியவும் பழகிக் கொள்ள வேண்டும்.
லாபத்தை நினைக்கும் போது அதன் நட்டத்தையும் நினைக்க வேண்டும்.
ஏமாற்றும் பொழுது சுய கெளரவத்தையும் சிந்திக்க வேண்டும்.
நினைக்கத் தெரிந்ததுபோல மறக்கவும் தெரிய வேண்டும்.
மனதை ஒருமைப் படுத்த மறதி மிக முக்கியம்.
அரைகுறை நம்பிக்கை ஆபத்தில் முடியும், பூரண நம்பிக்கை வெற்றியைத் தரும்.

நா. மகேசன். - கனடா.