By ந. குமார் on Jan. 7, 2026
அழகிய இடைக்காடு
திவானி நீர் தடாகமும் அதன் பயன்பாடும்
***************************************
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஊருக்கு சென்றிருந்த கட்டத்தில் மதிய நேரம் எமது ஊரின் கிழக்கு வீதி, வடக்கு வீதி ,ஊடாக சுடலை வீதியூடாக நான் நடந்து வந்து கொண்டிருக்கையில் சில நாய்கள் நீருக்கு அலைந்து கொண்டிருப்பதினையும் சுடலை நீர்த்தொட்டி வரண்ட நிலையில் இருப்பதினை அவதானித்து மூன்று நான்கு வாளி நீர் தொட்டியினில் இறைத்து விட்டு சற்று விலகி தூர நின்று அவதானிக்கையில் மூன்று நாய்கள் தங்களின் பெருத்த தாகத்தினை தணிக்க பெரும் ஆவலுடன் சென்று நீரினை குடித்தன ! முதல் வருட மாரிகாலத்தில் மழை மிக குறைவாக இருந்ததினாலும் சித்திரை உட்பட எம்மாதத்திலும் மழை இல்லாதபடியினாலும் எம் ஊர் மேய்ச்சல் நிலங்களிலும் தொடர்வரட்சி என்றபடியினால் இப்படியான ஜீவராசிகளுக்கு தண்ணீர் மிகப்பெரும் தட்டுப்பாடு ! இதனை என் மனதில் எடுத்து இதற்கு ஒரு நிரந்தர முடிவு எட்டப்படவேண்டும் என்கிற நோக்கில் அதற்கான பொருத்தமான காணி ஒன்றினை வாங்கி திவானி திடல் என பெயர் பலகையிட பார்ப்போர் இவன் என்னடா இந்த இடத்தில் போய் முட்டாள்தனமாக காணியினை வாங்கி பெயர்ப்பலகை போடுகின்றானே என மனதுக்குள் எண்ணிக்கொண்டு தங்களுக்குள் கதைத்ததாக பின்பு அறிந்தேன் ! எவருக்கும் நான் என்ன செய்யப்போகின்றேன் என்கிற விபரத்தினை தெரிவிக்காது செயலினை செய்வதாக எண்ணிய அதேவேளை என் மகளின் பெயர் என்றும் எம் ஊரில் அழியாது நிலைத்திருக்க கட்டிடமோ வேறு ஏதேனுமோ கட்டினால் அவை ஏறக்குறைய நூறோ நூற்றைம்பது வருடங்களில் அழிவடைந்து விடும் ! இப்படியான நிலையில் இப்படியான ஊற்றுள்ள கேணி ஒன்றினை அமைத்தால் எத்தனை வருடம் சென்றாலும் அழிவடையாது சகல ஜீவராசிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி என் நண்பனிடம் என்முடிபினை சொல்ல அதற்கு அவர் 25 லட்சம் மட்டில் முடியும்( அவர் சொன்னதின் இரட்டிப்பு மடங்கு கிட்டத்தட்ட, ஏனெனில் தரமான மேலதிக கட்டுமானங்கள்) என சொல்ல சரி உடனே தொடங்கு என சொல்ல அவரின் ஒத்துழைப்பு மேற்பார்வையுடனும் திட்டமிடலுடனும் கட்டி எப்படிப்பட்ட வரட்சி காலத்திலும் எல்லா ஜீவராசிகளும்( மிருகங்கள், பறவைகள், பிராணிகள், ஊர்வன) தங்குதடையின்றி நீர் அருந்தக்கூடிய விதமாக அமைக்கப்பட்டுள்ளது என் மகளின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் வண்ணம் !
இதற்கு அருகில் ஆ உரோஞ்சிகல் ஒன்றும் சுமை தாங்கி ஒன்றும் இக்கட்டமைப்பில் சேர்கப்படுள்ளது ! குறைந்த பட்சம் நீரினை புறக்காரணிகளினால் அசுத்தமைடையாமல் இருப்பதற்காக நீரின் நடுவே கருங்கல்லினான கணபதி சிலை ஒன்றும் ! கேணியில் முடிவுவரை சாய்வாக அமைக்கப்பட்டுள்ளதினால் நீர் தேவைப்படும் ஜீவராசிகள் எவரின் உதவி இன்றி சுயமாகவே நீர் அருந்தக்கூடிய வசதியாகவும் எப்படிப்பட்ட கோடை காலத்திலும் ஐந்து அடிக்கு குறையாத மிக நல்ல நீர் இருக்கும் ஒரு அமைப்பாக அமையப்பெற்றது எம் மகளின் பெரும் கருணை மனதினை சொல்லி நிற்கின்றது !
இப்படியாக அமைப்பினை ஏற்படுத்தி அதனை பயன்பாட்டிற்கு 21-6-23 ல் என் மகளின் 20 வது வயதில் கொண்டு வரும் நிகழ்வில் என்னால் இலண்டனில் இருந்து சென்று கலந்து கொள்ள முடியாத சூழ் நிலையினால் என் உடன் பிறந்த சகோதரிகள், மருமகன் , நண்பர் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற தருணங்களை நேரடிக்காட்சி மூலமும் , படங்கள் மூலமும் பார்த்து சந்தோசமடைந்தவேளையில் நான் இவ் ஆண்டு 2025 ஆண்டு சித்திரை மாதம் ஊருக்கு சென்று பார்த்து சந்தோசமடைந்தேன் ! நாம் எதிர்பார்த்தது போலவே என் நண்பர் சுப்பிரணியம் சிவகுமார் அவர்கள் வடிமைத்திருந்தது அவரின் தொழிலின் சிறப்பினை மேலும் ஒரு படி உயர்த்தி நிற்கின்றது ! வரும் காலத்தில் என் மகளுடன் எம் பெயருடன் நண்பர் பெயரும் இதற்கு பக்க உதவியாக இருந்தோர் நாமமும் நிலைத்திருக்கும் என நம்புகின்றேன் !
நான் இவ் ஆண்டு 2025 ஏப்பிரல் 26ல் ஊர் சென்று நேரடியாக எம் செல்ல மகள் திவானி பெயரில் அமைக்கப்பட திவானி நீர்த்தடாகத்தினை நீண்ட நேரம் மகிழ்ச்சியாக பார்வையிடும் தருணத்தில் என் உறவுகள் பலர் அங்கு வந்து அவ் அமைப்பு தொடர்பாக ! நல்ல பிரயோசனமான செயல், காலத்திற்கும் அழியாது, சகல ஜீவராசிகளின் தாகம் தீர்க்கும் அரும்பணி, ஆவுரோஞ்சிக்கல் மாடுகளின் உடம்பில் ஏற்படும் அசொளகரியத்தினை தீர்க்கும் அமைப்பு சிறப்பு, அழிந்து வரும் நிலையில் இருக்கும் சுமை தாங்கி அமைப்பு இளைய தலைமுறயினருக்கு கடந்த கால சமுதாய வாழ்க்கைமுறையினை சொல்லி நிற்கும் எனவும் சிறப்பாக சொன்னதுடன் இவ் அமைப்பு சற்று ஒடுக்கமாகவும் கீழ் நில அமைப்பு காங்கிறீற் என்பதினாலும் அனேக மாடுகள் உள்ளே இறங்கி நீர் அருந்த வெருட்சி அடைகின்றன என தங்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தனர் !
அதற்கு உண்மைதான் நீங்கள் கூறுவது ! அதிலும் ஒரு சாதக நிலை இருக்கின்றது ! நில அமைப்பு கொங்கிறீற் இல்லாதிருந்தால் வெளி நிலத்தின் மண் சாய்வாக இருப்பதினால் மழை பெய்யும் காலங்களில் மண்ணும் வேறு அழுக்குகளும் நீருடன் சென்று நீர் அசுத்தமாக வாய்ப்பு அதிகம் ! இவ் அமைப்புக்கு நீர் வெளியில் இருந்து செல்லவேண்டிய அவசியமே இல்லை !ஏனெனில் இது நல்ல நீர் ஊற்றுடன் என்றும் வற்றாத அமைப்பு ! நீர் எப்போதும் வெளியே செல்லாத நிரந்தர நீர் ஊற்று அமைப்பு ! மாடுகள் நீர் சுயமாக நீர் அருந்தும்போது நீருக்குள் மூன்று நான்கு அடி உள்ளே சென்று நீர் அருந்தும்போது கால் குளம்பில் உள்ள அழுக்குகள் நீரில் கலக்கும் அதே வேளை மாடுகள் நீர் அருந்தும்போது கோசலம், கோமயம் வெளியேற்றுவது அதன் சாதாரண இயல்பு ! அவை அக்கேணி நீரில் கலக்கும்போது அடுத்து நீர் அருந்த வரும் மாடுகளோ அல்லது அடுத்த நாளோ அம்மாடோ அக்கோசல கோமய வாடைக்கு நீர் அருந்தாது ! எனவே இங்கு எல்லா மாடுகளுக்கும் அவைகளுக்குரிய எஜமானர்கள், பராமரிப்பாளர்கள் என இருப்பவர்கள் இந்த மேய்ச்சல் நில வரட்சியாக இருக்கும் காலங்களில் மாடுகளுக்கான நீரினை வாளிகளை கொண்டு துலாவோ, கயிறு போன்ற எவ்வுதவியும் இல்லாது நீரினை அள்ளி மாடுகளுக்கு தாகம் தீர்க்க பெரும் உதவி செய்வதே சிறப்பு !சில செயற்திட்டங்களை நிறைவேற்றும்போது சிறு சிறு குறைபாடுகள் இருக்கவே செய்யும் ! அதை சரிபண்ணும் பாரிய பொறுப்பும் எம்முடையதே !அத்துடன் எவ்வித பராமரிப்பளர்களோ எஜமானர்களோ இல்லத மாடுகளுக்கு வரட்சி காலங்களில் அதிக தாகம் எடுக்கும்வேளையில் பய உணர்வினை தாண்டி தாங்களாகவே தம் தாகத்தினை தீர்க்கும் ! நாமே வன்னி சென்று தோட்டம் செய்கின்ற காலங்களில் தாகம் அதிகமாக அங்கு ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் இறங்கி இரு கைகளால் அள்ளி குடித்து விட்டு நிமிர்ந்து பார்க்கையில் நீர் ஓடிவரும் வழியில் விரும்பதகாதவற்றினை கண்ணுற்றாலும் எமக்கு ஏற்பட்ட தாகமே பெரிதாக இருக்கும்
வருடா வருடம் மழைப்பொழிவு சிறப்பாகவும் போதியளவு இல்லாத காலங்களில் எமது ஊரின் வடபகுதி மிக வரட்சி ஏற்படும் காலங்களில் இந்த சவர்த்தன்மை இல்லாத நல்ல நீர் ஊற்றுக்கொண்ட சாய்வான திவானி நீர்த்தடாக கேணி எல்லா ஜீவராசிகளின் தாகத்தினை தீர்க்கும் என மிகுந்த நம்பிக்கை கொண்டர்களாக நாம் ! இதனால் ஏற்படும் சகல சிறப்பு யாவும் எம் செல்லணி, குட்டிம்மா, பிள்ளையான எம் மகள் திவானியையே சாரும் ! அவாவின் பெயர் என்றும் காலத்திற்கும் நிலைத்திருக்க வேண்டி எம்மால் செய்துள்ள செயற்பாடு இது ! நான் இச்செயல்பாட்டின்போது இல்லாவிட்டாலும் நண்பன் சுப்பிரமணியம் சிவகுமார்( சிவன்) என் உடன் பிறந்த சகோதரிகள், மருகன் சஞ்ஜீவன் , தம்பியார் கருணாகரன் , சூரியகாந்தன், கதிரவேலு நகுலன், குமாரதாசன் செந்தூரன், குணசீலன் உட்பட பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்விலே பங்கு பற்றி சிறப்பித்த அனைவருக்கும் எமது சார்பில் மிகுந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்! இவ் அமைப்பினை மூலம் எம் மகள் பெயரும் எம் பெயரும் எம் பெற்றோர் பெயரும் என் ஆச்சியின் பெயரும் இணைந்து நீண்டகாலம் இவ் ஜீவகாருண்ய செயலினால் நிலைத்திருக்கும் என நம்புகின்றோம்
உம் இழப்பு இன்னொருவர் மூலம் நிரப்பிக்கொள்ள ஒரு வெற்றிடத்தினை தருமே தவிர உம்மைப்பற்றிய தேடலை தராது ! என்பதே நிதர்சனமான உண்மை !
அதனை முறியடிக்க இப்படியான ஜீவகாருண்ய செயற்பாடுகள் துணை நிற்கலாம் என்கிற நம்பிக்கையுடன் !!!
நன்றி
ந. குமார்