மதுபழக்கமும், புகைபிடித்தலும்.

By நா. மகேசன் கனடா on Oct. 29, 2025

Card image cap

மதுபழக்கமும், புகைபிடித்தலும்.
பொதுவாகவே மது அருந்துவது என்பது பொழுதுபோக்காக மாறிவிட்டது. இன்றைய இளைய தலைமுறையினர் மாலை நேரத்தில் ஒரு போத்தலை வாங்கி குடிப்பது அன்றாட வழக்கமாகி விட்டது. குடிப் பழக்கம் ஒருவனை ஒளிவு மறைவு இல்லாமல் நடக்க வைக்கின்றது.. இப்போதைய காலகட்டத்தில் நீங்கள் மது அருந்தவில்லையென்றால் உங்களிடம் ஏதோ ஒரு குறை இருக்கின்றது என்று உங்களை ஒரு மாதிரி எல்லோரும் பார்ப்பார்கள். அவர்களது கருத்து ஒப்புவமை இதுதான், நீங்கள் செல்வந்தராகவும், விவேகம் உள்ளவராகவும் இருந்தால் நீங்கள் எவ்வளவு மது அருந்தினாலும் உங்களின் செல்வாக்கை இழக்காது நீங்கள் செல்வாக்கு உடையவராக இருப்பீர்கள். உங்களின் செல்வம் குறைந்து விட்டால் எதிர்மறையாக மாறும்.
எங்குசென்று யாராவது ஒருவரை தண்ணீர் தாருங்கள் என்று கேட்டால் மதுப் போத்தலைத்தான் நீட்டுவார்கள். குடிப்பழக்கம் என்பது எல்லோரிடமும் ஒரு கவர்ச்சிகரமான பழக்கமாக மாறிவிட்டது. முதல்தடவை அல்லது மது அருந்தினால் எப்படி இருக்கும் என்று பரிசோதித்துப் பார்ப்போம் என்று தொடங்கி மது உங்களிடம் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொள்ளும். மது அருந்துபவர்களை ஏன் மது அருந்துகிறீர்கள் என்று கேட்டால் இப்படியான காரணங்களை பட்டியல் போடுவார்கள்.
கொண்டாடுவதற்காக
வேடிக்கைக்காக
பிரச்சனைகளை மறப்பதற்காக
ஓய்வு எடுப்பதற்காக
துணிவாக ஒருவிடயத்தில் இருக்க
மற்றவர்களுடன் எளிதாக உரையாட
நாகரீகமாக வாழ
என்று இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். பொதுவாக எல்லோரும் தங்களது நண்பர்களின் அன்புத் தொல்லைக்குப் பணிந்து விடுவார்கள். நீ எனது நண்பன் அல்லவா, எனக்காக ஒரு சொட் எடு, நீண்ட நாட்கள் சந்திக்கவில்லை அல்லவா, அதனால் இன்னொரு சொட் எடு என்று கூறி உங்களை முழு மதுபோதைக்கு கொண்டுபோய் விடுவார்கள். இப்படியான அன்புத் தொல்லையை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உயிருக்கே ஆபத்தாகும்.மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளில் 50 வீதமானோர் மது போதையுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று கனடா புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. 2024 ம் ஆண்டு ஒவ்வொரு 60 வினாடிக்கும் கனடாவில் மதுபோதையுடன் சம்பந்தப்பட்ட குற்றவியல் நடக்கின்றது என்று புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
மது அருந்துதலை தவிர்ப்பது நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை பயக்கும். நாமும் மது அருந்துதலைத் தவிர்ப்போம்.

நா. மகேசன்.
கனடா.