Informed by சிவா முருகுப்பிள்ளை on Aug. 15, 2025
ஒரு கிராமத்தின் அடையாளம்...... காந்தனின் மரணம்
யுத்தங்கள் நடைபெற்ற போதும் சத்தங்கள் நடைபெற்ற போதும் கிராமத்தில் வாழ்ந்தவர் தொடர்ந்தும் வாழ்ந்தவர்.
பலரைப் போல் தனது குடும்பத்தை… உறவுகளை கிராமத்தை பூனை குட்டிகளை காவுவதைபோல் இடம் மாற்றி காப்பாற்றியவர். இது எமது யுத்த காலத்தின் அடையாளம்தான்.
மாணவப் பிராயத்தில் கல்வியில் அதிலும் கணக்கில் கெட்டிக்காரராக விளங்கினாலும் கமத்தையும் கல்வியையும் சமாக கொண்டு செலுத்த முடியாத சூழல் அவரை சிறந்து கமக்காரனாகவே மாற்றி அடையாளப்படுத்தியது.
கிராமத்தின் கோவில் திருவிழாக்கள் ஊரின் சடங்கு சம்பிரதாயங்களில் பந்தல் முதல் சுவாமி காவுதல் சூரன் ஆட்டுவதில் இவரின் பங்களிப்பு இல்லாமல் இல்லை.
இடைக்காடு என்ற செம்மண் பிரதேசத்து விவசாய பூமியின் அடையாளமாக வளர்ச்சியாக பார்க்கப்படும் பல கிராமத்து காந்தன்களில் இவரை நிச்சயமாக அடைக்கலாம்.
வரலாற்று ஓட்டத்தில் கிராமங்களின் அடையாளமாக சந்திப்புக்களாக அதிகம் ஆதிக்கம் செலுத்திய சன சமூக நிலையங்களில் இடைக்காடு சனசமூக நிலையம் முக்கியமானது.
இதன் வரலாற்றை நினைவுகளை நிகழ்வுகளை இவரின் பெயரைக் குறிப்பிடாமல் எழுத முடியாது.
சிறப்பாக எம்மால் யுத்த்திற்கு முன்னரான 70 வதுகளின் நடுக் கூற்றில் இளைஞர்களின் கவனச் சிதறல்களை விளையாட்டின் பக்கம் திருப்பி அவர்களை ஒழுங்கமைப்பதற்காக என்னைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட சனசமூக நிலைய விளையாட்டுப் பிரிவில் கரப்பந்தாட்டத்தில் காந்ததனின் இணைவு விளையாட்டு அந்த எம்பி அடித்தல் கலகலப்பானது காத்திரமானது பலமானது
கூடவே வெயில் வேளைகளில் மதியம் இரவு என்பதாக உள்ளக விளையாட்டாக 'டாம்' 'கரம்' போன்றவற்றின் இணைவும் கலகலகப்பான உற்சாகமான இணைவு இவருடையது.
அவருடன் சம காலத்தில் பயணத்தில் பயணித்த பலரின் இனிமையான நினைவுகளாக இவை அந்த கிராமத்தின் வேலிகளால் மரங்களால் மனிதர்களால் தேவதைகளால் பேசப்படுபவை.
இதில் எல்லாம் தோட்ட வேலை முடிந்து கிடைக்கும் ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் இணைந்து அவர் பங்குபற்றிய களியாட்டங்கள் கலகலப்புகள் உற்சாகங்கள் எம் கிராமத்தின் அடையாளங்களாக தற்போதும் பல பேசுவதை கேட்டும் இருக்கின்றேன்
எனது தாய் வழி மைத்துனியை திருமணம் செய்ய முன்பே காந்தன் எனக்கு உறவினராக அயலவராக மரியாதைக்குரிய மூத்த அண்ணராக நண்பராக இருந்தாலும் இன்னும் நெருக்கமாக திருமணத்தால் அண்ணர் ஆனவர்.
சில வருடங்களுக்கு முன்பு செல்வச் சன்னதி கந்த சட்டி சூரன் போர் காலத்தில் தாயம் சென்ற போது….
சூரன் போர் பார்பதற்கு செல்வச் சன்னிதி கோவிலுக்கு எனது அக்காவுடன் சென்ற போது என்னை ‘…..இம்முறை நீதான் பல்லக்கில் நின்றபடி சூரன் ஆட்ட வேண்டும்....' என்று ஒரு வகை வற்புறுத்தலாக அழைத்தவர்….
உண்மையில் பல்லக்கில் என்னை ஏற்றாத குறைதான்....? அந்த சூரனை ஆட்டுவது அவ்வளவு சுலபம் அல்ல. 40 வயதுக்காரன் என்றால் செய்திருப்பேன்.
மூன்று தொடக்கம் நாலுமணி நேர சூரன் ஆட்டத்தை பல்லக்கில் நின்றபடி பல்லக்கை காவுபவர்கள் அங்கும் இங்கும் ஓடி ஆட்டி அசைத்து எறிந்து ஏந்தி என்றாக எலலாச் சூழலிலும் சூரனைப்படித்த வண்ணம் தாக்குப் பிடித்தல் என்பதை என்றால் செய்யமுடியும் என்பதை என் வாலிப வயது 'வொலி போல்' விளையாட்டின் அடிப்படையில் அவர் எடுத்த தீர்மானம் அவர் என்னை வற்புறுத்துவதற்கு காரணமாகவும் இருந்து
அதனை அன்பாக மறுத்து சூரன் போரின் பரிவாரங்களில் ஒன்றாக சில கணங்கள் தரையில் ஆட வைத்தவர் அவர் அவரும் இதில் என்னுடன் இணைந்து ஆடியவர்
எனது அக்காவின் மகனின் திருமணத்திற்கு கிராம வழகங்களின் படி பலகாரச் சூடு என்றாக ஒரு கிழமையாக வீட்டில் தினமும் மாலை வேளைகளில் நடைபெற்ற போது என் எனது மைத்துனி எனது வீட்ற்கு பல பெண்களுடன் இணைந்த போது……
முற்றத்தில் ஏற்றிய பலகாரச் சூட்டு அடுபிற்கு அருகாக அவர்களுக்கு ஒத்தாசையாக பேச்சிலும் செயலிலும் இடுபட்டிருந்தோம்.
நானும் அவளும் மணிக்கணக்காக பலகாரச் சூட்டுன் பேசிக் கொண்டிருந்த போது இரவாகியும் பல தடவை தனது வாழ்கைத் துணையை அழைத்துச் செல்ல வந்து எமது கதை தொடர்வதைப் பார்த்து பகிடிகள் பல சொல்லி பல தடவை திரும்பி போனவர்.
மச்சானும் மச்சாளும் ஆயிரம் கதைப்பீர்கள் சொல்லி இருந்தால் சாமத்தில் வந்து கூட்டிச் சென்றிருப்பேன் என்றவர்….
இன்று அந்த கலகலப்பு பேச்சுகளை அடக்கி இயற்கை எய்தது மனிதிற்கு இழப்புகளின் வலிகளை அதிகம் சுமக்கவே வைக்கின்றது......
நிமிர்ந்த நடை நேரிய பார்வை தமிழருக்குரிய நிறமான மாநிறம் அற்ற தோற்றம் என்றாக வைரம் பாய்ந்த இந்த உடலுக்கும் மரணம்வருமா அதுவம் இந்த 70 வயதிற்குள் என்றாக மனம் வருந்துகின்றது.
யுத்தம் விட்டுச் சென்றி சீரற்ற வாழ்க்கை முறையும் யுத்தத்தின் போதான ஓட்டமும் அலைச்சலும் எம் சமூகத்தில் இப்படியான ஆவசரப்படும் மரணங்கள் பலதை இந்த கந்தகப் பூமியில் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது.
ஊரின் கல்யாணம் கருமாரி என்றாக பந்தல் கால்நட்டு பந்தல் போடுதல் கோவில் சுவாமி காவுதல் படையல் அவித்தல் சனசமூக நிலையின் முன்னோக்கிய நகர்ச்சி விசாயத்தை நேரத்தியாக வெற்றிகரமாக நடாத்தயபடி தமது குடும்ப கமூக வாழ்வை நகர்த்துதல் என்பதாக வாழ்ந்த கிராமத்து காந்தன்களில் ஒருவராகவே என் அண்ணர் காந்தனின் மரணம் எனக்கு உணரப்படுவதினால் அவரின் மரணம் ஒரு கனதியான இழப்புதான்.
அவரின் புகழ் உடல் இடைக்காட்டின் சாமித் திடல் மயானத்தில் இளைப்பாறட்டும்.
அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலி மரியாதைகள்.