By நா.இ.ஈசுவரன். on Oct. 24, 2020
நிகழ்வுகளின் நினைவுகள் ---- இடைக்காடு சன சமூக நிலையம் ----- 1976.
பயிர் பாதுகாப்பு --- கிருமிநாசினி அறிமுகம்.
விவசாய
கிராமமான இடைக்காட்டில் 1976 களில் என்னோடு ஒத்த வயதுடைய இளம்விவசாயிகள் விவசாய முயற்சிகளில் செயல்படுகின்ற நேரம் அது, 1976 பெரும்போக ( மார்கழி 1975- சித்திரை 1976 )பயிர் செய்கையின் முக்கிய உற்பத்தியான வெண்காய அறுவடை முடிந்து அதனை வீட்டில் கொண்டு வந்து உரிய முறையில் சேமித்துவைத்துவிட்டு, அதன் ஊடு பயிரான (ஊடு பயிர் என்றால் வெண்காயத்திற்கு இடையே மிளகாய் நாற்றுகளை நாட்டி அதனை வெண்காயத்தை பாதிக்காதவாறு பேணி வளர்த்து வெண்காயம் அறுவடை செய்தபின் தொடராக மிளகாய் கன்றினை பேணி வளர்த்தல்) மிளகாய் கன்றிற்கு பாத்திகளை மீளமைத்து உரமிட்டு வளர்த்து அவை பூவும் பிஞ்சுமாக செழித்து வளர்ந்து கண்ணுக்கு மிக அழகான காட்சியாக இருந்தது.
இன்னும் ஓரிரு வாரங்களில் அவை பழுத்து அறுவடைக்கு வந்துவிடும் என்ற மகிழ்வில் நாம் இருந்த நேரம் அது,
ஒருநாள் காலை மிளகாய் தோட்டத்திற்கு சென்ற எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான காட்சி காத்துக் கொண்டிருந்தது., எல்லா மிளகாயிலும் துவாரங்கள் ஏற்பட்டு அழுகி இருந்தது, உள்ளே பார்த்தால் பச்சை நிறத்தில் சிறிய புழுவொன்று இருந்ததைக் கண்டு எல்லோரும் அதிர்ச்சி யடைந்தனர். உடனே அதற்கு வழமையாக பாவிக்கும் கிருமிநாசினிகளை தெளித்தனர், மறுநாள் பார்த்தால் அது இன்னமும் வேகமாக பரவியிருந்தது. விவசாயிகள் எல்லோரும் ஒன்றுகூடி சந்தையில் கிடைக்கின்ற எல்லாவகையான கிருமி நாசினிகளையும் வாங்கி தெளித்தனர். ஆனால் எந்தவொரு கிருமி நாசினிக்கும் அது கட்டுப்படவில்லை. மாறாக மருந்து தெளித்த பலர் அம்மருந்துகளால் பாதிக்கப்பட்டு மயக்க மடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றதுதான் கண்ட மிச்சம்.
ஒன்றுமே செய்யமுடியாது கையறுநிலையில் எல்லோரும் சனசமூக நிலையத்தில் ஒன்றுகூடி இதனை எவ்வாறு கட்டுபடுத்துவது என விவாதிக்க தொடங்கினார்கள். எப்போதும் எங்கள் மூத்த உறுப்பினரான திரு வி, சிவபாலன் அவர்களின் கருத்தினை எல்லோரும் எதிர்பார்ப்பது வழக்கம்., அன்றும் அதுவே நடந்தது, திரு சிவபாலன் அவர்கள் நாம் யாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தினை நாடி அவர்களின் ஆலோசனையைப் பெறுவோம் என எல்லோரும் அதனை ஏற்றுக் கொண்டனர். எனவே அன்று இரவு தோட்டத்து க்குச் சென்று கிருமியின் வாழ்க்கை வட்டம் முழுவதையும் சேகரிப்பதென முடிவானது, அதன்படி அந்த பூச்சி, அதன் முட்டை, கூட்டுப்புழு, பாதிக்கப்பட்ட மிளகாய் செடியின் பாகங்கள் என எல்லா மாதிரிகளும் சேகரிக்கப்படு மறுநாள் யாழ் மாவட்ட விவசாய திணைக்களத்திற்குச் செல்ல ஒழுங்கு செய்யப்பட்டது, திரு சிவபாலனுடன் திரு மு. கிருஸ்ணகுமார் ( சந்திரமணி)அவர்களும் நானும் செல்ல முடிவு செய்தனர். அதன்படி காலையில் நாம் மூவரும் யாழ் செயலகத்திலுள்ள யாழ் மாவட்ட விவசாய திணைக்கள ஆணையாளரை சந்திக்க சென்று காத்திருந்தோம், காலை 10-00 மணியளவில் அவரை சந்தித்து பேச சந்தர்ப்பம் கிடைத்தது, கொண்டுபோன மாதிரிகளை காட்டி நானும் சிவபாலன் அவர்களும் ஆணையாளருடன் பேசினோம்.
அவர் எமது விளக்கங்களை கேட்டுவிட்டு ஒரேவரியில் : இது இடைக்காட்டார் ஒரே பயிரை( வெண்காயம், மிளகாய் ) தொடர்ந்து செய்வதனால் மண் மாசாகி விட்டது. ஒன்றும் செய்ய முடியாது அவற்றை அழித்துவிட்டு வேறு பயிர் செய்யுங்கள் என்று சொல்லி விட்டார், நாம் எவ்வளவோ முயன்றும் அவர் எம் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவே இல்லை. எங்களால் ஒன்றும் செய்யமுடியாது போய்விடுமோ என்று நான் யோசித்துக் கொண்டிருக்க திரு சிவபாலன் அவர்கள் கிருஸ்ணகுமார் அவர்களை பார்த்து என்ன அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறாய் பேசு என்றார், அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கிருஸ்ணகுமார் மிக கடுமையான தொனியில் “ நாம் தாலிமுதல் எல்லா நகைகளையும் அடவுவைத்து கஸ்டப்பட்டு விவசாயம் செய்து பாதிக்கப்பட்டு வந்திருக்கிறோம் நீங்கள் மிக சுலபமாக பயிர்களை அழித்துவிடுங்கள் என்று சொல்கிறீர்களே, நீங்கள் இதற்கு ஏதாவது செய்யாவிடின் நாம் குடும்பத்துடன் தற்கொலை செய்வதைத் தவிர எமக்கு வேறு வழி இல்லையென சத்தமாக பேச விவசாய ஆணையாளர் அதிர்ந்து போய் விட்டார்,
அவர் உடனடியாக திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்கிருந்த செல்வரட்ணம் என்ற தலைமை நுண்ணுயிர் ஆய்வாளரை வரவழைத்து அவருடன் அவரது காரில் எம்மை திருநெல்வேலி விவசாய பண்ணைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்றதும் செல்வரட்ணம் அவர்கள் உதவி நுண்ணுயிர் ஆய்வாளரான, இளைஞரான மன்னாரைச் சேர்ந்த திரு ரவேல் என்பவரிடம் எம்மை அறிமுகப்படுத்தி வைத்தார். நாம் அவருக்கு எல்லா விடயங்களையும் சான்றுகளுடன் தெளிவு படுத்தினோம். அவர் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவற்றை உரிய முறையில் பாதுகாப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்துவிட்டு எம்முடன் கலந்துரையாடும் போது, இதற்கு மகாஇலுப்பள்ளத்தில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் சில ஆய்வுகளுக்காக நியூசிலாந்து நாட்டில் இருந்து வருகை தந்துள்ள நுண்ணுயிர் ஆய்வாளரான திரு றொஸ்பெலொஸ் அவர்கள் பொருத்தமானவர் எனவும் அவரை நாம் இங்கு வரவழைப்போம் எனவும் தான் அவருக்கு தந்தி மூலம் அறிவிப்பதாகவும் எம்மையும் அவருக்கு தந்தி அனுப்புமாறும் சொன்னார்,. நாம் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு வெளியே வந்து அங்கிருந்த உபஅஞ்சல் அலுவலகத்திற்கு சென்று தந்தி அனுப்பினோம். அப்போது இப்போது உள்ளதுபோல் கைதொலைபேசி வசதிகள் எல்லாம் கிடையாது. நேரமும் மதியத்தை தாண்டி வெகுநேரமாகிவிட்டது. அன்று மதிய உணவு அருந்த எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தேநீருடன் வீடுவந்து சேர்ந்தோம்.
இதற்கிடையில் நாம் காலையில் விவசாய ஆணையாளரை சந்திக்க சென்றதும் சனசமூக நிலையத்தில் இருந்த மற்ற அங்கத்தவர்கள் எமக்கான போக்குவரத்து செலவிற்காக சிறு தொகை பணத்தினை சேகரித்திருந்தார்கள். மறுநாளில் இருந்து நாம் பிரயாணம் செய்வதற்காக திரு க, தங்கவேல் அவர்களின் மோட்டார் வாகனத்தை எமக்காக ஒழுங்கு செய்திருந்தனர் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும், அவரும் எரிபொருளுக்கான பணத்தையே பெற்று அச் சேவையை வழங்கினார், இதற்கு காரணம் இப்படியான சமூக சேவைக்கான பிரயாணங்களுக்கு நாம் எமது சொந்த பணத்தில் செலவிடவேண்டும் ,சனசமூக நிலையத்திடம் இருந்து எந்த பணமும் பெறுவதில்லை என்பது பொதுவான நிலைப்பாடாகும்.
மறுநாள் காலை திரு றவேல் அவர்கள் தனது குழுவினருடன் எமது நிலையத்திற்கு வருகை தந்து மாலை திரு றொஸ்பெலோஸ் அவர்கள் வந்து விடுவார் எனவும் நாம் அதற்குமுன் அந்த இடங்களை ஆய்வு செய்து அவருக்கு தெரிவிக்க வேண்டும் என்றுகூறி எமது பொருதானையில் உள்ள மிளகாய் தோட்டத்தை பார்வையிட்டு சென்றார்,மாலை 5-00 மணியளவில் திரு றவேல் அவர்கள் திரு றொஸ்பெலோஸ் அவர்களுடன் வேறு ஓரிரு ஆய்வாளர்களுடன் வந்து சேர்ந்தார். திரு றொஸ்பெலோஸ் அவர்கள் பொருதானையில் உள்ள மிளகாய் செடிகளை பார்வையிட்டுவிட்டு மறுநாள் காலை பத்து தெளிகருவிகளுடன் பத்து பேர் வேண்டும் என்றார். நாம் அவ்வாறே ஆயத்தங்களை செய்து விட்டு அவர்களுக்காக காத்திருந்தோம். சொன்னபடி காலை 6-00 மணிக்கு அவர்கள் வந்து பத்துவிதமான கிருமிநாசினிகளை குறிப்பிட்ட அளவுகளில் அடையாளமிடப்பட்டு திரு றொஸ்பெலொஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன. மாலை வரை யாரும் அதற்குள் செல்லாதபடி பார்த்துக் கொள்ளுமாறும் மாலை 5-00 மணிக்கு வருவதாகவும் கூறிச் சென்றார்கள். குறிப்பிட்டபடி மாலை வந்து ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்டு பின் எம்மையும் அழைத்து பத்தில் மூன்று பகுதியை அவதானிக்கும்படி காட்டினர். அந்த மூன்று பகுதிகளிலும் தெளிக்கப்பட்ட கிருமிநாசினி நன்கு வேலை செய்திருந்தது. அப்பகுதியில் உள்ள புழுக்கள் இறந்தும் முட்டைகள் பாதிக்கப்பட்டும் இருந்ததை அவதானித்தோம். மறுநாள் மருந்துகளின் விபரங்களையும் பாவனை பற்றிய அறிவுறுத்தல்களையும் வழங்குவதாக சொல்லிவிட்டு சென்றனர்.
அவ்வாறே காலை வந்து ‘ சுமிசிடீன், அம்புஸ் என்ற இரண்டு மருந்துகளை அறிமுகப்படுத்தி பாவனை பற்றிய விளக்கங்களையும் தெரிவித்ததுடன், கொழும்பிலுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடைக்காடு சனசமூக நிலைய மூடாக மக்களுக்கு வழங்குவதற்கான சிபார்சு கடிதங்களையும் தந்தனர்,, நாம் அவர்களுக்கு ஒரு சிறிய தேநீர் விருந்தொன்றினை வழங்கி அவர்களை மகிழ்வித்து அனுப்பினோம்.
ஒருவாரத்தின்பின் கொழும்பிலுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம் நேரடியாக எமது இடைக்காடு கிராமத்திற்கு வந்து இடைக்காடு சன சமூக நிலையத்தில் வைத்து விவசாயிகளுக்கு போதிய அளவு மருந்தினை வழங்கினர். இதை அறிந்து அயல் கிராமங்களான வளலாய்,தம்பாலை, கதிரிப்பாய்,பத்தமேனி,அச்சுவேலி முதலான கிராம மக்களும் வந்து அதனை வாங்கி பயனடைந்தனர்.
இந்த செய்திகள் யாவும் அன்றைய ஈழநாடு, வீரகேசரி தினப் பத்திரிகைகளில் முகப்புச் செய்தியாக வெளிவந்திருந்தமையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
‘ முயற்சி இல்லையேல் வளர்ச்சி இல்லை;.
நா.இ.ஈசுவரன்.
கனடா.
இக்கட்டுரையை நான் எனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்தேன்,அதில் அந்த பூச்சி இனத்தின் பெயரை மறந்துவிட்டதால் குறிப்பிடவில்லை., ஆனால் முகநூல் நண்பர் முத்துராஜா அவர்கள் அதன் பெயரை குறிப்பிட்டு விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.அவருக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக! மேலும் இப்படியான ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எம்மை மேலும் எழுத ஊக்கம் தரும், கீழே அவரது விமர்சனத்தை அப்படியே தருகின்றேன்.
V.M முத்துராஜா.
இந்தக்காலப் பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் நானும் ஒருவன், மிளகாய்,பீற்றூட்,பயிர்கள் விலங்குகள் மேய்ந்தது போல் இரு நாட்களில் மோசமாக பாதிக்கப் பட்டது. இந்த பூச்சி இனம் Army Worm/ caterpillar என்றும் அதன் விஞ்ஞானப் பெயர் Spodoptera exiqua என்றும் அறியப்பட்டது. இவை படை வீரர்கள் முன்னேறி வருவதுபோல் கோடிக்கணக்கில் பயிர்களை நோக்கி வந்து நாசம் செய்யும் ஒரு புழு ( moths ) வகை., மீண்டும் ஞாபக மூட்டியமைக்கு நன்றிகள் பல.
நா.இ.ஈசுவரன்.