By நா. மகேசன் (கனடா ) on March 7, 2025
மனக்குழப்பமும், தடுமாறும் எண்ணமும்
இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன,? அண்ணன் தம்பி உறவுமுறை என்று சொல்லலாம். ஒரு செயலைச் செய்யும்போது அதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் இறுதி வரைக்கும் இருக்க வேண்டும். மனதைக் குழப்பாமலும் தடுமாறாமலும் திண்ணமாக வைத்து இருந்தால் ஆரம்பித்த காரியம் பூரணமாக நிறைவு அடையும். ஒரு வேலையை ஆரம்பிக்கும்போது அது எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்க வேண்டும் என்ற திட்டத்தை முதலே திட்டமிட வேண்டும்.. எவ்வளவு சிறப்பாக திட்டமிட்டாலும் அதை நிறைவேற்றும் வழியிலும் அக்கறையாக இருக்க வேண்டும், குழப்பமும் தடுமாற்றமும் வந்தால் அது அரைகுறையில் நின்றுவிடும்.
ஆனால்தடைகளைக் கண்டு துவளுவதோ மனம் உடைந்து போவதோ கூடாது. எதிர்ப்புக்களை ஏற்புக்களாக மாற்றவேண்டும். இதற்கு எல்லோரையும் ஒரு நிலைப்படுத்த வேண்டும். பலமுறை முயற்சித்தேன் வெற்றி கிட்டவில்லை என்று சோர்ந்து போவதைப் போல் முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.வெற்றி கிடைக்கும் வரை எடுத்த காரியத்தைக் கைவிடக்கூடாது. மேலும் தடங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வைக் கண்டறீய வேண்டும். அதுதான் அவரின் திறமையின் வெளிப்பாடு.
எத்தனையோ விஞ்ஞானிகள் பல தோல்விகளைக்கண்டு துவண்டுபோகாமல் விடா முயற்சியினால் பல கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து அவைகளை நாம் அனுபவித்து வருகின்றோம். நான் சொல்வேன் தோல்வியைக்கண்டு மனக்குழப்பம் அடைபவர்கள் எந்தக் காலத்திலும் முன்னுக்கு வரமாட்டார்கள். அத்தோடு தாம் முன்னேறவும் மாட்டார்கள் .மனத்துணிவு வேறு, மனவலிமை வேறு. ஆரம்பக் கல்வி கற்காதவன் உயர்கல்வி கற்க முயற்சிப்பது என்பது அசட்டுத்துணிவு. தான் தோன்றித்தனமான எண்ணங்கள் அறிவு குறைந்தவனுக்கு ஏற்படலாம், ஆனால் அறிவு உள்ளவனுக்கு அது ஏற்படக்கூடாது. மன வலிமை உடையவனுக்கு உடல் வலிமை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் உடல் வலிமை இருந்தும் மன வலிமை இல்லையென்றால் எதுவுமே பயன் இல்லை. இதற்கு நான் ஒரு புராணக்கதையை உதாரணமாகச் சொல்கிறேன். திரிசங்கு மன்னன் தன் இறந்த உடலுடன் சொற்கத்திற்கு போவதற்காக பலமுறை முயற்சி செய்தான். அதற்காக எத்தனையோ முனிவர்கள் ரிஹிகளைக் கண்டு உதவி கேட்டார். அதற்கு ஒருநாளும் இது நடக்காது என்று மறுத்துவிட்டார்கள். ஆனால் அவன் தன் மனவலிமையைக் கைவிடவில்லை. கடைசியாக விஸ்வாமித்திரரிடம் சென்றான், அவரிடம் தன் மன விருப்பத்தைச் சொன்னான், இவரின் ஆசை விஸ்வாமித்திரரைக் கவர்ந்தது. அவர் தனது மனவலிமையால் திரிசங்குவை உடலோடு சொற்கத்திற்கு அனுப்புவதாக சொன்னார். அவ்வாறே திரிசங்குவை பூதவுடலோடு சொற்கத்திற்கு அனுப்பினார். அதைக் கண்ட தேவேந்திரன் அவரை வஜ்ஜிராயுதத்தினால் அடித்து கீழே தள்ளினான், அதைக் கண்ட விஸ்வாமித்திரர் திரிசங்குவை தடுத்து நிறுத்தினார். திரிசங்கு சொர்க்கமும் இல்லாமல் நரகமும் இல்லாமல் இடையில் நின்றான் இதைக் கண்ட விஸ்வாமித்திரர் திரிசங்கு சொர்க்கம் என்று ஒரு சொர்க்கத்தையும் தோற்றுவித்தார். அதற்கு அதிபதியாக திரிசங்குவை மன்னனாக முடிசூட்டினார். ( திரிசங்கு மன்னர் அரிச்சந்திரரின் தந்தையாவர் ). இந்த உண்மைக் கதையில் இருந்து மனவலிமையின் உறுதியை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
நா. மகேசன்.
கனடா.