வாழ்க்கை என்றால் என்ன ?

By நா. மகேசன் on April 3, 2024

Card image cap

ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது உங்கள் உடல், உள்ளங்களில் இருந்து தீய சிந்தனைகளை வெளியேற்றி விடுங்கள், இல்லை காலி செய்து விடுங்கள் கொள்கை. நித்திரை இல்லை என்பது எல்லோரையும் ஆட்சி செய்கின்றது. இதற்கு என்ன காரணம். பழைய பிரச்சனைகள், பழைய தீமைகளை
சங்கடங்கள், சச்சரவுகள் இல்லாத மனங்கள் சக்தியைப் பெருக்கும்.,இது எனது மீளாய்வு செய்வதுதான். எனது தந்தை சிறு வயதில் சொன்னது ஒன்று எனக்கு ஞாபகம் வந்தது. அது என்ன!. இன்றைய நினைவுகளை மறவுங்கள் நாளை புதிய சிந்தனைகள் உருவாகும் என்று. நான் மனது நிறைய பிரச்சனைகளோடு படுக்க சென்றால் இரவில் நித்திரை வருமா? விடை, நிச்சயமாக இல்லை என்பதுதான். மாறுபட்ட மனதில் தான் பல முன்னேற்றமான எண்ணங்கள் உருவாகும், எண்ணங்களை மாற்றுவதற்குப் பயிற்சி தேவை. ஆசுவாசமான மனதை உருவாக்குவதன் மூலம் அமைதியைப் பேணலாம்.
வாழ்க்கை என்றால் என்ன ? வாழ்க்கையின் ஒரு பகுதி பிரச்சனைதான் என்று கூறுவார்கள். இதற்குத் தீர்வு என்ன? உங்களது பிரச்சனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் மன ஆறுதல் கிடைக்கும் என்பதா? இல்லவே இல்லை உங்களது பிரச்சனைகளை நீங்கள் அதிகரிக்கின்றீர்கள் என்றுதான் அர்த்தம். இதற்கு என்னதான் தீர்வு, நான் சொல்வேன் பிரார்த்தனைதான் என்று, சிறிய பிரச்சனை என்றால் சிறிய பிரார்த்தனை செய்யுங்கள். பெரிய பிரச்சனை என்றால் நீண்ட பிரார்த்தனை செய்யுங்கள். உயிர் நண்பன் என்றாலும் பரம இரகசியங்களை அவருக்குக் கூறிவிடாதீர்கள், ஏன் என்றால் அவர் எனது எதிரியாக மாறும்போது எனது பரம இரகசியங்களை மற்றவர்களுக்குக் கூறிவிடுவார். ஞாபகத்தில் வைத்து இருங்கள் வெறுப்பு, விரக்தி, தோல்வி, நட்டம், ஏமாற்றம், பகைமை இவை போன்றவற்றின் கூட்டுத்தொகைதான் பிரச்சனைகள். அமைதி நிறைந்த மனதைப் பெறுவதற்கு வழி, அதைக் காலி செய்வதற்குப் பயிற்சி செய்வதுதான்.
மனதைக் காலி செய்வதன் மூலம் மனம் காலியானபோது அதில் வேறு ஒன்று சென்று நிரப்ப முற்படும், இதைத் தடுப்பதற்கு நீங்கள் நல்ல சிந்தனைகள் , நல்ல எண்ணங்களால் மனதை நிரப்பி விடுங்கள். இல்லையேல் பழைய நினைவுகள் உள்ளே புகுந்து உங்கள் மனதில் குடிகொண்டுவிடும். இதைத் தவிர்ப்பதற்கு உங்கள் மனதில் புதிய எண்ணங்களையும், சிந்தனைகளையும் உறுதியுடன் பாதுகாத்து நிரப்பிக் கொள்ளுங்கள், இதை வலிமைப் படுத்தி விடுங்கள். இதனால் பழைய சிந்தனைகள் தோல்வி அடைந்து, உங்கள் மனதை விட்டு விலகிச் சென்று விடை பெற்று விடும்.
உங்கள் மனங்களை உறுதியாக வைத்து இருப்பதற்கு இரண்டு முக்கியமான விடயங்களைக் கடைப்பிடியுங்கள்.
எதுவும் உங்களை தொந்தரவு செய்ய அனுமதிக்காதீர்கள்.
எதுவும் உங்களை அச்சுறுத்துவதை அனுமதிக்காதீர்கள்
அமைதி என்பது குணமாகும், இது நல்ல பண்பின் வெளிப்பாடு. அமைதியைக் கடைப்பிடிக்கத் தெரிந்த எவருக்கும், எளிதில் நோய்கள் தொற்றிக் கொண்டதாக வரலாறு இல்லை. பூரணமான மெளனத்தைக் கடைப்பிடிப்பதன்மூலம் முழுமையான ஓய்வு நிலையைக் கொண்டுவரும். ஆனால் அவசரமான இவ் உலகில் அதனைக் கடைப்பிடிப்பது சுலபமான விடயம் இல்லை. என்பது உண்மை. இந்த இடங்களில் இருந்து விலகி விடுங்கள். மற்றவர்களின் மன அமைதியை சீர் குலைப்பவர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பாவங்கள் பல செய்து இருக்கிறேன் என்று எண்ணி தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வார்கள். இதனால் இவர்கள் நிரந்தரமாக நிம்மதி இன்றி வாழ்வார்கள்.
மனிதன் எப்பொழுதும் இறைவனிடம் தொடர்பு கொண்டு இருக்கவேண்டும் இல்லையேல் நீதி, நியாயம், கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு, போன்றவற்றைக் கடைப்பிடியாமல், வாழ்க்கையை மங்கச் செய்து விடுவோம். இதற்கு நான் உவமானமாக இதனைக் கூறுகின்றேன். மின்சாரம் மின்குமிழுடன் தொடர்பில் இருக்கும்போது மின்குமிழ் ஒளிவீசும். அது தொடர்பு அற்று இருந்தால் மின்குமிழ் ஒளிராது. சமயக் கோட்பாடுகளை அறிவியல் ரீதியாகப் பயன் படுத்தினால் மனித மனதிலும், உடலிலும் ஆற்றல் தங்கு தடையின்றி கடந்து செல்லும். இதனைக் கடைப்பிடிப்பது ஒவ்வொரு மனிதனின் கடமைப்பாடு ஆகும். ஒருவர் தனது வயது காரணமாகவோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ தன் ஆற்றலையும், வலிமையையும் இழக்கவேண்டிய அவசியம் இல்லை. இது எனது வாழ்வில் நான் கண்ட அனுபவம். மதத்திற்கும் மனதிற்கும் ஒருவழியான தொடர்பு உண்டு என்பதை நாம் விழிப்பு உணர்வுடன் கடைப்பிடிக்க வேண்டும். நிரந்தர வலிமையாக வாழ்வதற்கு நாம் வார்த்தையில் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். மனிதனாக நாம் வாழ்வதற்கு எங்கள் மனதை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் இல்லையேல் எமது மனம் பீரங்கி வேகத்தில் ஓடிச் சென்று விடும் அவமானம் என்ற கூட்டில் குடியிருக்க நிர்ப்பந்திக்கப் படுவோம். நா. மகேசன்.