By வே.இளங்கோ on March 20, 2024
யாழ்ப்பாணம் இடைக்காடு மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழா
1926-2026 புலம்பெயர் மாணவர்களின் பங்களிப்புடனான நூற்றாண்டு விழா
யாழ்ப்பாண மக்களின் கல்விச் செயற்பாட்டில் முன்னோடியாகத் திகழும் முன்னணி பள்ளிக்கூடங்களில் ஒன்றாக பன்னெடுங்காலமாக திகழ்ந்து பல கல்விமான்களையும் அறிஞர்களையும் உருவாக்கிய யாழ் இடைக்காடு மகாவித்தியாலயம் தனது நூற்றாண்டு விழாவை எதிர்வரும் 2026ல் சிறப்புறக் கொண்டாட உள்ளது தாங்கள் அனைவரும் அறிந்ததே.
1975ல் எமது பாடசாலையின் பொன்விழாவினை 3 தினங்கள் சிறப்பாகக் கொண்டாடியது போல் நூற்றாண்டு விழாவினையும் அதைவிடச் சிறப்பாக கொண்டாடுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்.
பன்னெடுங்காலமாக நாம் அனைவரும் எம் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளில் கவனம் செலுத்தினோமேயன்றி பாடசாலைகளின் பௌதிக செயற்பாடுகளில் கவனம் செலுத்தாமல் விட்டதனால் எமது பாடசாலையின் கட்டிட மின்னியல் நீர் வழங்கல்ää மலசல கூட மற்றும் கூரைப்பகுதிகள் போன்ற பௌதிக நிலை மிகவும் பழுதுபட்டு பெரியதோர் திருத்த வேலையை வேண்டி நிற்கின்றது.
எமது பாடசாலைகளின் பௌதிக வளத்துக்கு வலுச்சேர்த்து நிற்கும் அமரர் நமசிவாயம் அவர்களின் தன்னிகரில்லா அன்பளிப்பு மூலம் நிறுவப்பட்ட இரண்டு மாடிக் கட்டடமே ஐம்பது வருடங்களையும் தாண்டி உள்ளதால் அதற்கு சில அவசர திருத்த வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது. காலத்திற்கு காலம் செய்ய வேண்டிய திருத்த வேலைகளை நாம் செய்யாது விடின் அது பாவனைக்கே உதவாத நிலையை அடைந்துவிடும். வெள்ளம் வந்த பின் அவலப்படுவதை விட வெள்ளம் வருமுன் அதனை சீர்செய்வதே புத்திசாலித்தனமாகும். இன்னமும் நாம் தாமதிப்போமானால் எமது பாடசாலைக் கட்டடத்தை நாம் இழக்க வேண்டி ஏற்படலாம்.
அடுத்து எம் முன்னால் உள்ள கேள்வி இதைச் செய்வது யார் என்பதே தற்போதைய மாணவர்களின் பெற்றோரா? அல்லது பழைய மாணவர்களா? அன்றி புலம்பெயர்ந்து வாழும் நாங்களா? தாயகத்தில் உள்ள உறவுகள் இதனைச் செய்வதற்கு தயாராக இருந்தபோதும் அவர்களின் பொருளாதார வளம் போதுமானதாக இல்லை. புலம்பெயர் உறவுகளான எம்மிடம் அவர்கள் இதற்கான உதவியை எதிர்பார்த்து நிற்பது இயல்பானதே அதனைச் செய்யவேண்டிய கடமையும் பொறுப்பும் எம்மிடம் உள்ளதை நாம் மறுப்பதற்கில்லை. அது கடமையும் கடனும் கூட மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று அவர்களைப் பார்ப்பதை விட நாம் எமது கடமையைச் செய்யும்போது எடுத்த கருமம் செய்மையாய் நிறைவேறும். எமது நூற்றாண்டு விழாவும் சிறப்புற நடந்தேறும்.
அண்மையில் எமது முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு கூட அவர்களினுடைய ஊதியத்தை வழங்க முடியாது கலங்கி நின்றவேளை புலம்பெயர் உறவுகளான எமது நன்கொடை அவர்களது பிரச்சினையை செவ்வனவே தீர்த்து வைத்தது. அவ்வாறு இவ்வேளையிலும் எமது பாரிய பொறுப்பை எம்மால் தீர்த்து வைக்க முடியும் என்பதை திடமாக நம்புகின்றோம்.
முயற்சித்தால் முடியாதது என்று ஏதுமில்லை. ஊர் கூடித் தேர் இழுப்போம். ஓடா தேரும் ஓடியே தீரும்.
நன்றி
அன்புடன்
வே.இளங்கோ
இடைக்காடு மகாவித்தியாலய
பழைய மாணவன் - கனடா