By நா. மகேசன் கனடா. on March 2, 2024
செயல்திட்டங்களும் அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளும்.
“ சிலரின் திட்டங்கள் நல்லதாகத் தோன்றினால் அதனைச் செய்து முடிப்பது என்பதே இன்றைய நிலைப்பாடு ஆகும். “ ஆனால் இது எல்லோருக்கும் பயன்பாடு ஆக இருந்தால் செய்தவர்களுக்கு கெளரவத்தைக் கொடுக்கும். பயன்பாடு அற்று இருந்தால் அகெளரவத்தைக் கொடுக்கும். இந்த திட்டங்களின் செயல்பாட்டை நான்கு காரணங்கள்தான் கட்டுப்படுத்துகின்றது. அது என்ன? 1. நீதி. 2. நியாயம். 3. கடமை. 4. பொறுப்பு. இந்த நான்கையும் நாம் கடைப்பிடிக்காவிட்டால் அதற்கு இரு பெயர் உண்டு .அது என்ன? ஏமாற்றுதல் தான். ஆனால் இதற்கு நேர்மாறானதும் எதிர்மறையானதும் ஒன்று உள்ளது அது என்னவென்றால் எல்லோரும் விரும்புவதையும், எல்லோரும் ஏற்றுக் கொள்வதையும் செய்வதுதான்.
பொதுவாக நான் சொல்வேன் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் வேலை அதிகம். பகல்முழுவதும் வேலை செய்துவிட்டு இரவு தூங்கும்போது நள்ளிரவில் தன் பிள்ளை பசி என்று கேட்டால் தன் தூக்கத்தைவிட்டு எழுந்துகொள்ள விரும்புவாரா ?, இல்லையா? மறுமொழி ஆம்தான். ஏன் தன்பிள்ளை என்ற சுயநலம்தான். அதுபோல சில திட்டங்களை தங்களது சிரமத்தையும் பாராது, நேரத்தையும் பாராது, செயல்திட்டங்களை நிறைவேற்றுவது பொதுநலம் ஆகும். இவர்களுக்கு சமுதாயத்தில் உயர்ந்த கெளரவத்தைக் கொடுங்கள். முன்னோர்கள் செய்த பொதுப்பணிகளை நாம் அனுபவித்தோம். இது உண்மைதான் ஆனால் எங்களுக்கு ஒரு கடமைப்பாடு உள்ளது அது என்ன? எதிர்கால சந்ததியினருக்கான பொதுப்பணிகளை செய்வதுதான்.
நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டு இருக்கின்றீர்கள். அதுபோல மற்றவர்களும் உங்கள்மீது நம்பிக்கை கொள்ளக்கூடியமாதிரி நடவுங்கள் இதை நிலை நிறுத்துவது நியாயமான நடவடிக்கைகளாகும். உறுதியான செயல் திட்டங்களும், நேர்மையும், நீதியும் உங்களைச் சாதனையாளர்கள் என்ற பட்டியலுக்கு இட்டுச் செல்லும். இதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் எதிர்மறையான பட்டியலுக்கு உங்களை இட்டுச் செல்லும். இதனால் நீங்கள் மற்றவர்களின் அவநம்பிக்கைக்கு ஆளாவீர்கள். ஒருவர் அளவுக்கு அதிகமாக பேசுவது தாழ்வு மனப்பான்மை ஆகும். இது சுய நம்பிக்கை இன்மையின் வெளிப்பாடு ஆகும். இது பிரிவும், புரிதலும் இல்லாத நிலைக்கு இட்டுச் செல்லும். இது ஒரு செயல் திட்டததை செய்வதற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக அமையும்.
நீங்கள் நம்பிக்கை என்ற விதைகளை, எல்லோர் மனதிலும் விதையுங்கள். நம்பிக்கை என்ற ஊற்றை எல்லோர் மனதிலும் உருவாக்குங்கள். நீங்கள் ஒர் செயல் திட்டதைத் தொடங்கும் பொழுது பாதுகாப்பு இன்மை, நிதி போதாமை , நிறைவேற்ற முடியாமை அல்லது தேவை அற்றவை என்றால் அந்த திட்டத்தை எல்லோரிடமும் கலந்து ஆலோசித்து, தொடங்குவதற்கு முதல் முடிவு எடுங்கள். தேவையற்றைவைகளையும் நிறைவேற்ற முடியாதவற்றையும் தொடங்கினால் அதை நிறைவேற்ற முடியாமல் போகலாம். இன்று எல்லோர் மனதையும் ஆட்கொண்டு இருக்கும் முக்கிய பிரச்சனை தன் நம்பிக்கை இன்மைதான், இதை நாம் எம்மனதில் இருந்து வேரோடு அகற்ற வேண்டும்.
செயல்திட்டங்களின் தாக்குதல்களும், பெருகும் சிரமங்களும் ,அதிகரிக்கும் எதிர்ப்புக்களும் உங்கள் திறமைகளை உறிஞ்சி உங்களை பலம் அற்றவனாகவும், சக்தி அற்றவனாகவும், ஊக்கம் அற்றவனாகவும் ஆக்கி விடுகின்றன. இந்த நிலை பெரும்பாலும் உங்கள் கண்களுக்குப் புலப்படுவது இல்லை என்று காரணம் காட்டி உங்கள் முயற்சிக்கும், மனச் சோர்வுக்கும் காரணம் காட்டி நியாயப்படுத்த முடியாது. இத்தகைய நிலையில் உங்களது செயல் திட்டங்களை மற்றவர்களுடன் சேர்ந்து மறு பரிசீலனை செய்வது அவசியம். இத்தகைய செயல் முறைகளினால் குறைந்த செலவில் செயல்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி விடலாம்.
பலபேரின் எண்ணங்களுடனும், பல பேரின் அபிப்பிராயங்களுடனும் பலபேரின் ஒத்துழைப்புடனும் செயல்திட்டங்களை நிறைவேற்றினால் அது பயன் உள்ளதாகவும், பலமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று நான் சொல்வேன்.
நா. மகேசன்
கனடா.