MANY A SLIP BETWEEN CUP AND LIP

By நா. மகேசன் கனடா. on Feb. 20, 2024

Card image cap

MANY A SLIP BETWEEN CUP AND LIP

என்னால் முடியாதது ஆறே ஆறுதான், என்னாலயோ இல்லை உங்களாலயாவது முடியாது. உங்களால் மட்டுமல்ல உலகத்தில் உள்ள ஒருவராலும் முடியாது அது என்ன ? இதுதான் அது.
1. தாய் தந்தையரை தெரிவு செய்ய முடியாது.
2. நான் ஆணாகவோ, பெண்ணாகவோ பிறப்பதை தெரிவு செய்ய முடியாது.
3. எந்த மதத்தில் பிறப்பேன் என்பதை தெரிவு செய்ய முடியாது.
4. எந்த இனத்தில் பிறப்பேன் என்பதை தெரிவு செய்ய முடியாது.
5. எந்த கலாச்சாரம், பண்பாடு என்பதை தெரிவு செய்ய முடியாது.
6. எந்த நாட்டில் பிறப்பேன் என்பதை தெரிவு செய்ய முடியாது.
இந்த ஆறையும் தவிர நாங்கள் எல்லோரும் எல்லாம் செய்யலாம் என்ற மன பக்குவம் வர வேண்டும்.
முன்னேற்றத்தைப் பொறுத்தவரை முன் யோசனையுடன் சில ஆபத்துக்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆபத்துக்களை எதிர் கொள்வது என்பது பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்வது என்று அர்த்தம் இல்லை. சிலர் இதை கண்மூடித்தனமான நடத்தை என்று நினைத்து விடுகிறார்கள். இவர்கள் எதற்கும் துணிந்து முடிவு எடுக்காமலும், முயற்சி எடுக்காமலும் கடைசியில் தோல்வியைத் தழுவிக் கொண்டு தங்களின் துர் அதிஸ்டம் என்று குறை கூறுவார்கள்.
எதிர்ப்புகளை எதிர் கொள்வது ஒப்புமைக்கு உடன்பாடு உடையது. இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இது ஒரு முயற்சியின் வடிவமாகவும் இருக்கலாம்., திறமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். பொறுப்பு உள்ள எதிர்ப்புக்களை எதிர் கொள்ளும் பொழுது அது எமக்கு பலத்தையும் மன வலிமையையும், தைரியத்தையும் தரும் எதையும் செய்யாத மனிதன் எந்த தவறுகளையும் செய்வதே கிடையாது, ஆனால் அவர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே பெரும் தவறு என்பதை உணர்வதே இல்ல. துணிந்து முடிவு எடுக்காமல் இருப்பதால் பல சந்தர்ப்பங்களை ,தலைக்கு மேல் போனாலும் நாங்கள் எட்டிப் பிடிப்பதே இல்லை. இதுவே எமக்கு பழக்கமாகி பல சந்தர்ப்பங்களை இழந்து வாழ்க்கையில் பின்னடைவை சந்தித்து வருகின்றோம். முன் யோசனையுடன் ஆபத்துக்களை எதிர் கொள்ளுங்கள். முன் யோசனை இல்லாமல் ஆபத்துக்களை எதிர் கொள்பவர்கள் இருட்டில் விளக்கை அணைத்துவிட்டு செல்வதற்கு ஒப்புவமையாகும்.
இனி விடயத்திற்கு வருவோம் சந்தர்ப்பங்கள் எப்பொழுதும் கூடிய பகுதி ஒருமுறைதான் வரும்.நழுவ விடாதீர்கள் இதற்கு நான் வாசித்த ஒரு உதாரணக்கதையை உங்களுக்கு உவமானம், உவமேயம் ஆகக் கூறுகின்றேன் இந்தியாவிலே நீர், நில வளமற்ற ஓர் கிராமத்தில் ஓர் குடும்பம் லவ்கிக வாழ்வு வாழ்ந்து வந்தது. அவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்வு நடத்தி வந்தனர். அவர்களுக்கு முதலில் ஒரு பெண்குழந்தை பிறந்தது. அதன்பின் நான்கு வருடங்களுக்குப் பின் ஒரு ஆண் குழந்தை சூரியன் உதிக்கும் நேரத்தில் பிறந்தான். அவன் பெற்றோரின் அன்பிலும் அக்காவின் ஆதரவிலும் வாழ்ந்துவந்தான். அவன் தனது அக்கா பாடசாலைக்குச் செல்ல இவனும் அவளின் துணையுடன் பாடசாலைக்கு சென்று கல்வி கற்று வந்தான். இப்படியே காலங்கள் கழிந்தன. பெண் வயதுக்கு வந்து அயலூரிலுள்ள ஒரு ஆடவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். தம்பி தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்தான். இப்படி இருக்கையில் இவனுக்கும் பதினாறு வயது ஆகும்போது தகப்பன் நோய் வாய்ப்பட்டு இறந்து போனார். அதே வருடம் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். இவன் தனியே அதரவு இன்றி வாழ்ந்து வந்தான், அவனிடம் பணம் இல்லை.கல்வியைத் தொடர முடியவில்லை. வேலைக்கு அலைந்து திரிந்தான். வேலையும் கிடைக்கவில்லை /வாழவழி தெரியாது மூன்று மைல் தூரத்தில் உள்ள சகோதரியின் வீடு சென்று உணவு அருந்தி வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் சகோதரியின் வீட்டில் உணவு அருந்திக் கொண்டு இருக்கும் போது மைத்துணர் வந்தார் “யார் அடா ” - உன்னை இங்கு வந்து உணவு உண்ண சொன்னது என்று அவனை துரத்தத் தொடங்கினார். அவன் ஓடத் தொடங்கினான் மைத்துணரும் துரத்திக் கொண்டே போனார். அவரும் விட்ட பாடில்லை, இவனால் ஓடமுடியாமல் களைத்துவிட்டான். ஆகா ! என்ன அதிசயம் அவனின் தலைக்குமேல் ஒரு காகம் ஒரு கோழிக் குஞ்சை கொத்திக் கொண்டு சென்றது இவனால் ஓட முடியவில்லை. ஆயினும் சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாதென்று அக் காகத்தை துரத்தி சென்றான். என்ன அதிசயம் காகம் அந்த கோழிக்குஞ்சை நிலத்தில் போட்டுவிட்டு பறந்து சென்று விட்டது. இவனும் அந்த கோழிக்குஞ்சை எடுத்துவந்து அதற்கு நல் எண்ணை தடவி அதற்கு உணவூட்டி வளர்த்து வந்தான். ( 3 x 7 + 21 ) நாட்களில் முட்டையில் இருந்து கோழிகுஞ்சுகள் வெளிவரும். ( 3 x 30 ) நாட்களில் கோழி முட்டை இடும். இந்தக் கோழி.யும் மூன்று மாதத்தின் பின் 12 முட்டைகள் இட்டது.. அந்த 12 முட்டைகளை அடை வைத்தான். அந்த 12 முட்டைகளிலும் இருந்து 21 நாட்களில் 12 குஞ்சுகள் பொரித்தன.. இப்படியே அவன் வரும் முட்டைகள் எல்லாவற்றையும் விற்காமல் குஞ்சு பொரிக்க வைத்தான். இப்படியே ஒரு வருடத்தில் 720 கோழிகள் ஆக பெருகின. இப்படியாக அவன் அந்த கிராமத்தில் கோழிப்பண்ணையொன்றை அமைத்து கோழிகளைப் பெருக்கிக் கொண்டான். இன்று அவனின் கோழிப் பண்ணையில் 6000 பேர் வேலை செய்கின்றனர். பல மாநிலங்களூக்கும் கோழிமுட்டைகளை அனுப்பி வருகின்றான்.
இந்த தொழில் அதிபர் அந்த சந்தர்பத்தை தவறவிட்டு இருந்தால் இவரின் நிலை என்ன? நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் இவரின் சரியான சந்தர்ப்பமும் விடா முயற்சியும் இவரின் மன ஓர்மமும் இவரைத் தொழில் அதிபராக்கியது. இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? சந்தர்ப்பம் கிடைக்கும்போது தவறவிடாதீர்கள். நான் சொல்வது நல்ல சந்தர்ப்பங்களை, தீய சந்தர்ப்பங்களை அல்ல!
இந்த உண்மைக் கதையில் இருந்து நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்ன. இவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. தாய் தந்தையரும் ஒன்றும் கொடுக்கவில்லை, ஆனால் இவர் முன்னேறி உள்ளார். இதில் இருந்து நாம் புரிந்து கொள்வது என்ன. எமக்கு தாய் தந்தையர் சொத்து சேர்த்து வைக்கவில்லை. எனக்கு சீதனம் தரவில்லை, உறவினர்கள் உதவவில்லை, நண்பர்கள் உதவவில்லை, போன்ற எதிர்பார்ப்புக்களை இன்றுடன் மறந்து விடுங்கள். நீங்களே உங்களை முன்னேற்றிக் கொள்ளுங்கள்

நா. மகேசன்
கனடா.