By நா. மகேசன். கனடா. on Oct. 12, 2023
எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள், எப்பொழுதும் குற்றம் குறையே சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
பலருக்குள் சிலர் எந்த இடம், எந்த சந்தர்ப்பம் என்றுகூட பார்க்காமல் குற்றம், குறை கூறத் தொடங்குவார்கள். நீங்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி நண்பராக இருந்தாலும்சரி, உங்களின் எதிர்பக்கமே அவர்கள் பேசுவார்கள்.
இவர்களுக்கு மற்றவர்களைப் பற்றி குற்றம் குறை சொல்வதையே பகுதிநேர தொழிலாக் கொண்டிருப்பார்கள். இவர்கள் உயர்ந்த விமர்சகர்கள், இவர்கள் ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமூகத்திலும் குற்றம் சொல்வார்கள் .இவர்கள் ஒவ்வொரு விடயங்களிலும் எவ்வளவு பிழைகள் இருக்கின்றது என்று இந்த ஜென்மம் முழுவதும் குறைகூறிக் கொண்டே இருப்பார்கள். இவர்களை சமுதாய விசமிகள் என்றுகூட கூறலாம்.
இப்படிப்பட்டவர்களால் இவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு மனவிரக்தியும், வெறுப்பும் தான் வரும். – நோய்போல எதிர்மறை செய்திகளைப்பரப்பி, ஒற்றுமை இல்லாத சமுதாயத்தையும் உருவாக்கிவிடுவார்கள் இவர்கள் எப்போதும் பொதுப்பணிகள், சமூகப்பணிகள் செய்பவர்களின் குறைகளைத்தான் முதன்மைப்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் 1000 க்கு மேற்பட்ட நல்ல விடயங்களை செய்து இருப்பார்கள் அதனை முதன்மைப்படுத்த மாட்டார்கள். அவர் செய்த சிறு தப்பைத்தான் முன்னிலைப்படுத்தி பேசுவார்கள். தப்பு என்பது அறியாமல் செய்வது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எதிர்மறை சிந்தனைகள் தரும் தீமைகள்.
சமுதாயத்தில் குழப்பத்தை உருவாக்கும்.
மற்றவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும்.
அர்த்தமற்ற வாழ்க்கையை உருவாக்கும்.
மற்றவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
தீய சிந்தனைகள் கொண்டவர்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்வது. மாற்றம் என்பதை ஏற்றுக் கொள்வது சிரமம்தான். அது நன்மை பயக்குமோ, அல்லது தீமை பயக்குமோ, அதைக் கடைப்பிடிப்பது என்பது கடினம்தான். ஏன் நீங்கள் ஒன்றைச் செய்யப்போனால் சிலர் சொல்வார்கள், ஊருடன் ஒத்துப்போ. நீ உந்தவிடயத்தை எப்போது அறிந்தாய், அதனைப்பற்றி உனக்கு என்ன தெரியும். அதுவெல்லாம் சரிவராது என்று பல கருத்துக்களைக்கூறி உங்கள் முயற்சிக்குத் தடைக்கற்களைப் போட்டு மறித்து விடுவார்கள். இதற்கு நான் ஒரு உதாரணக் கதையை சொல்லுகின்றேன். அமெரிக்காவிலே ஒருவர் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து விடுதலை பெற்று வெளியே வந்தார். அவரால் வெளிச்சத்தைப் பார்க்க முடியவில்லை, சொந்தக்காரர்களை அறிய முடியவில்லை. அவர் சிறைச்சாலை அதிகாரிகளுக்குச் சொன்னாராம் நீங்கள் என்னை மறுபடியும் சிறைச்சாலைக்குள் அடைத்துவிடும்படி. இப்படித்தான் நாங்கள் மாற்றங்களை, மாற்றுவது என்பது சற்று சிரமம்தான். ஆனால் மாறிவிடுவார்கள்.
நாம் சிறுவயதில் இருந்தே சிந்தனையை உருவாக்கிக் கொள்கின்றோம். அதுவே நம் வாழ்நாள் முழுவதும் ஆட்சி செய்கின்றது. நாம் சிறு வயதிலேயே நல்ல சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டால் அதுவே வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கின்றது. ஆனால் நாம் எதிர்மறை சிந்தனை கொண்டவர்களாக இருந்தால் அதை மாற்ற முடியாது என்று அர்த்தம் இல்லை. இது சுலபமா? என்றால் இல்லை சற்று கடினம்தான்.
நாங்கள் முதலில் நல்ல சிந்தனையாளர்களாக மாற வேண்டும், நல்லவற்றின் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சமூகத்திலோ. அல்லது பொதுப் பணியிலோ எது சரியானது என்பதைப் பார்க்க வேண்டும். சமுதாயத்திற்காக உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள் போன்றவர்களிடம் அறிவுரை கேட்க வேண்டும். குறைகூறுபவர்களை தேவலோகத்தில்கூட காணலாம். அதில் இருந்து முற்றுமுழுதாக விடுபட வேண்டும். பெரும்பானவர்கள் எதனைக் கடைப்பிடிக்கிறார்களோ, அதனையே திரும்பப் பெறுவார்கள். நன்மையையும், மகிழ்ச்சியையும் நலத்தையும் நாடினால் அவர்கள் அதையே பெறுவார்கள். பொய்ப்பிரச்சாரம், பொய் விமர்சனம், சண்டைகள், சச்சரவுகள் இவற்றை நாடினால் நாங்களும் இவற்றையே பெறுவோம். நல்ல சிந்தனைகளை சிந்தியுங்கள் என்றால், தீய சிந்தனைகளை கண்டு கொள்ளாமல் இருங்கள் என்று அர்த்தம் இல்லை.
நாம் எதை விதைக்கின்றோமோ, அதையேதான் அறுவடை செய்ய முடியும்.
விதை ஒன்றை விதைக்க சுரை ஒன்று முளைக்குமா?
நா. மகேசன்.
கனடா.