பண்புடன் வாழுங்கள், ஆனால் பண்பை எதிர்பார்த்து இருக்காதீர்கள்.

By நா. மகேசன். கனடா on Aug. 10, 2023

Card image cap

பண்புடன் வாழுங்கள், ஆனால் பண்பை எதிர்பார்த்து இருக்காதீர்கள்.

பண்பு என்பது அழகான நடத்தை. நாம் எல்லோரும் பண்புடன் வாழ வேண்டும். பண்பு என்பது நமது வார்த்தையிலும், செயலிலும், நடத்தையிலும் இருந்து வெளிப்படுகின்றது. பண்பு என்பது பணிவான பேச்சிலும் நேர்மையான செயலிலும், நீதியான நடத்தையிலும் உருவாகின்றது. இது நாம் ஒவ்வொருவரிடமும், மற்றும் பிறரிடமும் செலுத்தும் நன்றி உணர்வின் வெளிப்பாடு ஆகும். பண்பு என்பது நல்ல செயல்களை பரஸ்பரம் மாற்றிக் கொள்வது என்று அர்த்தம் அல்ல. ஏன் என்றால் இது கொடுக்கல் வாங்கல் விடயம் அல்ல. நல்லதொரு பண்பை எதிர் செயலால் சிதைக்கவோ, அழிக்கவோ முடியாது. அன்பு, பரிவு, பொறுமை என்பவற்றை திருப்பிக் கொடுக்க முடியாது.
பண்பு எமக்கு எதைக் கற்றுக் கொடுக்கின்றது. நண்பர்கள், உறவினர்கள் மற்றுமுள்ளவர்களுடனும் அன்பைத் தருகின்றது, நாங்கள் எல்லோரும் பல நேரங்களில் மனைவி, நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார் போன்றவர்களுடன் நாங்கள் பண்பாக பழக மறந்து விடுகின்றோம். பண்பு என்பது குணநலத்தையும், மன நலத்தையும் உருவாக்கும். பண்புகளில் முக்கியமானதொன்று எங்களின் வார்த்தைதான். நான் என்ற அகம்பாவம் பண்பு அற்ற நிலையில் இருந்துதான் உருவாகின்றது. நல்ல பண்பை நாம் கடைப்பிடித்தால் நன்றியும் பணிவும் நம்மிடம் உருவாகும். இயற்கையாகவே நமது பேச்சுக்களில் இனிமையும் மகிமையும் இருக்கும்.
பண்பு என்பது ஒவ்வொருவரினதும் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். பண்பை நாம் ஒரு சிறு புன்னகை மூலமோ, நன்றி என்ற வார்த்தையின் மூலமோ, ஒரு பாராட்டு மூலமோ வெளிப்படுத்தலாம். உங்களுக்கு ஒருவர் பரிசில்களை வழங்கினால் அந்த பரிசில்களைவிட கொடுத்தவர் தான் முக்கியம் பெறுகின்றார். ஆனால் உங்களை ஒருவர் அவமதிப்பு செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள், அவரைவிட்டு விலகிச் செல்வீர்கள், சற்று நேரம் யோசித்து பின் உங்களது வாழ்வில் நல்ல விதமாக பாதிப்பை ஏற்படுத்தியவர்களை, நினைவு கூர்ந்து பாருங்கள், நண்பர்களாக இருக்கட்டும், உறவினர்களாக இருக்கட்டும், அவர்கள் கூடிய நேரத்தை உங்களுக்காக செலவழித்து இருப்பார்கள். இவர்கள் தங்கள் பண்பின் காரணமாக செய்தார்களே தவிர நன்றிக்காக அல்ல!. பண்பாக வாழ்வதற்கு தியாக உணர்வு வேண்டும்.

பண்பு அற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைப் பார்க்கலாம்.
பொய் சொல்லத் தயங்க மாட்டார்கள்.
மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
ஒருவர் மன ஆறுதலுக்காக தன் ஆதங்கங்களை கூறி னால் அதை மற்றவர்களுக்குக் கூறி ஏளனம் செய்வார்கள்
மற்றவர்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள்.
நண்பர்கள் உறவினர்களாக இருந்தாலும், வேறு ஒருவர் மூலம் தங்களது எண்ணங்களை நடத்தி முடிப்பார்கள்.
தங்களுக்கு பொழுது போகாவிட்டால் மற்றவர்களுக்கு தொலைபேசி எடுத்து சாக்குப் போக்கு பேசுவார்கள்.
இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு விலகிக் கொள்ளுங்கள்.
பண்பு அற்றவர் பயன் அற்றவர் என்றுதான் நான் சொல்வேன்

நா. மகேசன்.
கனடா.