நீத்தார் பெருமை

By நா. இ. ஈசுவரன். கனடா. on May 19, 2023

Card image cap

நீத்தார் பெருமை
அமரர் திரு விஸ்வலிங்கம் சிவபாலன்
திரு சிவபாலன் அவர்கள் இடைக்காட்டில் திரு விஸ்வலிங்கம் அவர்களுக்கு மூத்த மகனாகப் பிறந்து உரிய முறையில் கல்வி கற்று, பின் விவசாயத் துறையில் ஈடுபட்டு விசுவமடு படித்த வாலிபர் திட்டத்தில் காணி ஒன்றைப் பெற்று விவசாயம் செய்து வந்தார். திருமணத்தின் பின் அவர் இடைக்காட்டில் தன் விவசாய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
அவருக்கும் எனக்குமான நட்பு நான் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரிக்கு உயர்தர வகுப்புக்குச் சென்றபோதுதான் ஏற்பட்டது. அவரின் இயல்பான நகைச்சுவைப் பேச்சு, நேர்மை, உண்மை, ஆளுமை என்பன எனக்கு மிகவும் பிடித்துப் போனதால் எமது நட்பு இறுதிவரை இருந்தது. அவரின் இறப்பிற்கு ஒருமாதம் முன் நான் அவரை தாயகம் சென்று சந்தித்து அவருடன் பல விடயங்களையும் கலந்துரையாடியிருந்தேன்.
மாணிக்க இடைக்காடர் சன சமூக நிலையத்தின் நிர்வாகத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியதுடன், பல்வேறு சமூக நலத்திட்டங்களில் இருவரும் இணைந்து பல்வேறு அலுவலகங்களுக்கும் சென்று பல பணிகளை எமதூருக்கு செய்துள்ளோம். அவரின் நேர்மை, பொதுவிடயங்களில் அவரின் ஆளுமை, செய்கின்ற வேலைத்திட்டங்களுக்கான வரவு, செலவு களில் மிகவும் சரியான அறிக்கைகள் போன்ற விடயங்களில் அவர் எப்போதும் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும், இப்படித்தான் வாழவேண்டும் என்று மற்றவர்களுக்கு ஓர் முன் உதாரணமாக வாழ்ந்து காட்டியுள்ளார். அதிலும் மக்கள் நலன் புரிச் சங்கத்தின் மூலம் ஊர் மக்களுக்கு அவர் அளப்பரிய சேவைகளைப் புரிந்துள்ளார். முக்கியமாக பாரிய நேய்வாய்ப்பட்ட பலருக்கு புலம் பெயர் வாழ் மக்களின் நிதிப் பங்களிப்போடு மிகச் சிறந்த வைத்திய வசதியை வழங்கி அவர்களை இயல்புநிலை வாழ்க்கைக்கு திரும்ப செய்துள்ளமை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாத விடயமாகும். எவரும் அவரை நோக்கி விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாதவராக வாழ்ந்து காட்டியுள்ளார். அதன் பயனாக இடைக்காட்டிலுள்ள சமூக அமைப்புக்கள் எதிலும் அவருக்கு முன்னுரிமையை ஊர் மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
ஒருவனின் சிறப்பை அவர் வாழும்காலங்களில் தெரியாது, அவரின் இறப்பின் போதுதான் தெரியும் என்பார்கள். அதுபோல அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சன சமூக நிலையம், இடைக்காடு கிராம அபிவிருத்தி சங்கம், அச்சுவேலி பல நோக்க கூட்டுறவு சங்கம், இடைக்காடு புவனேஸ்வரி முன்பள்ளி, இடைக்காடு மக்கள் நலன் புரிச் சங்கம் என்பன கண்ணீர் அஞ்சலி பதாதைகளை வைத்து அவருக்கு மரியாதையுடன் கூடிய அஞ்சலியை செலுத்தியிருந்தார்கள். எனக்குத் தெரிந்து இந்த அளவு அஞ்சலி பதாதைகள் இடைக்காட்டில் வேறு எவருக்கும் வைத்தது கிடையாது எனலாம்.
மிகவும் சுறுப்பாகவும், உற்சாகமாகவும் இயங்கி வந்த நண்பர் சிவபாலன் அவர்கள், நோய்வாய்பட்டு மிகக் குறுகிய காலத்தில் அவரின் மனைவி மறைந்ததனால் மிகவும் மனமுடைந்து கடைசிக் காலத்தில் துறவற வாழ்க்கையை மேற்கொண்டது போல் ஆசாபாசாங்களை விட்டு எவர்க்கும் சிரமத்தையோ, கஸ்டத்தையோ கொடுக்காது மிக அமைதியாக இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டார். அவரின் மறைவு எங்களுக்கு மட்டுமல்ல எமதூருக்கும் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பாகும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறையருளை வேண்டி நிற்கின்றோம். நிச்சயமாக அவரது ஆன்மா இறையடி சேர்ந்து அமைதி பெறும் என்பது திண்ணம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். --------------- திருவள்ளுவர்.

நா. இ. ஈசுவரன்.
கனடா.