நீதியாகவும் நியாயமாகவும் வாழ்வது எப்படி ?

By நா. மகேசன். கனடா. on Feb. 6, 2023

Card image cap

நீதியாகவும் நியாயமாகவும் வாழ்வது எப்படி ?
சில சமயங்களில் நீதி வெல்வது இல்லை. .ஆனால் அது நிலைத்து நிற்கும். அநீதி வெல்வது போல் தோன்றும், ஆனால் நிலைத்து நிற்பது இல்லை. நீதி என்றால் அது உண்மையின் வெளிப்பாடு. அநீதி என்றால் அது பொய்யின் வெளிப்பாடு. பொய் சொல்பவர்கள் தங்கள் பக்கம் அதிக ஆட்களை வசியப்படுத்தி வைத்திருப்பார்கள். தொடர்ந்து ஆட்களுடன் கதைத்துக் கொண்டே இருப்பார்கள். முதலில் பொதுவாக கதைத்து பின் தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு அமைப்பையோ குறைகூற தொடங்குவார்கள். நீங்களே அவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள். அநீதியை செய்பவர்கள் தொடர்ந்து ஆட்களுடன் பரப்புரைகளை செய்து கொண்டே இருப்பார்கள். சிலகாலங்களிலேயே இவரின் வார்த்தையில் உண்மை இல்லை என்று மக்கள் முடிவு கட்டி விடுவார்கள், இவர்களைப் புறம்தள்ளி விடுவார்கள். இவர்கள் ஒருவிடயத்தை தொடங்குவார்கள் ஆனால் நிறைவேற்றி முடிக்க மாட்டார்கள் இடை நடுவில் கைவிட்டு விடுவார்கள்.
நேர்மை என்பது நீதியின் வெளிப்பாடு கடமை என்பது நியாயத்தின் வெளிப்பாடு. நேர்மை என்பது திறந்த மனதையும், நம்பிக்கையையும், ஒளிவு மறைவு இன்மையையும் நல்ல பண்பையும் ஊற்றாகக் கொண்டது. தனக்கும் பிறருக்கும் நன்மையைச் செய்கின்றது. நீதி என்பது உள்ளார்ந்த குணத்தில் இருக்கின்றதே தவிர, வெளிப்படை நடத்தையில் இருப்பது இல்லை. பொய் மிகவும் வேகமானதாக இருக்கும். ஆனால் பொய் சொல்பவர்கள் பட்டம் பெற்றதும் இல்லை. அவர்களுக்குச் சிலை வைத்ததும் இல்லை. ஆனால் மக்கள்தான் இவர்களுக்குப் பட்டம் சூட்டுவார்கள்.
ஒருவர் முன்னேறுவதற்கு நீதியை விட்டுக் கொடுத்தால் அது நியாயமாகுமா? அல்லது குறுக்கு வழிகளைப் பயன்படுத்தினால் அதி பயன் தருமா? ஒருவர் குறுக்கு வழியில் முன்னேறலாம், அது நிம்மதியையும் நிறைவையும் தருமா? அவர் மகிழ்ச்சியாக வாழ முடியுமா? ஒருவர் ஒரு பொதுப் பணிகளைச் செய்வதைவிட அதில் நீதியாக இருப்பதே நியாயமானது.

நீங்கள் ஒரு செயலைச் செய்யும்போழுது உங்களுக்கு உள்ளேயே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
1. நான் செய்யும் செயல் எனக்கே சரியாக இருக்கின்றதா அல்லது மக்களுக்குச் சரியாகத் தோன்றுமா ?
2. நான் செய்யும் செயலால் எனக்கும் சமூகத்திற்கும் நன்மை கிடைக்குமா?
3. பொது நீதியாகவோ அல்லது சமூக நீதியாகவோ எனக்கோ அல்லது சமூகத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்துமா?
நீதியும் நீதியின்மையும் பொதுவாக எல்லோரும் செய்ய அது அவர்களுக்கு பழக்கமாகி விடுகின்றது. சிலர் நீதியின்மையில் தேர்ச்சி பெற்று நீதியான முகத்துடன் பொய் சொல்ல முடியும், இவர்களை இனம் காண்பது அரிது. மற்றவர்கள் இவர்கள் சொல்வது பொய் என்று அறியமுடியாத அளவிற்குப் பொய் சொல்வார்கள். ஆனால் இவர்கள் யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? யாரையும் இல்லை! தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . மற்றவர்களை அல்ல?
நீதியைப் பண்புடன் எடுத்துக் காட்ட வேண்டும். சிலர் ஆவேசத்துடன் எடுத்துக் காட்டுவார்கள், இது பண்பற்ற நிலைக்கு கொண்டுபோய் விடும்.

நீதியை கடைப்பிடிக்காதவர்களை எப்படி இனம் காண்பது?
1. எப்போதும் சிறு சிறு பொய்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
2. உண்மைகளுடன் சில பொய்களையும் கலந்து சொல்வார்கள்.
3. பொய் சொல்லும் போது இருமல், செருமல், தலையை சொறிதல் போன்றவற்றைச் செய்துகொண்டிருப்பார்கள்.
4. மெளனமாக இருந்து பெரிய பெரிய பொய்களைச் சொல்வார்கள்!

மீண்டும் மறு மடலில் உங்களைச் சந்திக்கும் வரை
உங்கள்
நா. மகேசன்.