By ஈஸ்வரன் நாராயணபிள்ளை on Dec. 23, 2020
நிகழ்வுகளின் நினைவுகள்--3 -- இடைக்காடு சனசமூக நிலையம் –1976
வெள்ளிவிழா மண்டப திறப்பு விழாவும் ---தரிசிக்கும் மருந்தகமும்.
எமதூரில் மருத்துவமனை இல்லாமை ஓர் நீண்ட குறைபாடாக விளங்கி வந்துள்ளது, மருத்துவ தேவைகளுக்கு மக்கள் பக்கத்தில் உள்ள அச்சுவேலி கிராமிய வைத்தியசாலைக்கோ அல்லது வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கோ தான் போக வேண்டியிருந்தது. அதற்கும் நாம் பேருந்தில் செல்வதானால் அச்சுவேலி தொண்டமானாறு பிரதான வீதிக்கு நடந்து சென்றுதான் போகவேண்டியிருந்தது. அதனால் வயது முதிர்ந்தோர் பெரிதும் சிமப்பட்டார்கள் எமதூரில் அடிக்கடி விசக்கடி பாதிப்பு ஏற்படுவதுண்டு. இக்குறைபாட்டை முழுமையாக தீர்க்க முடியாவிடினும் ஓரளவிற்காவது சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் 1974 ல் நான் இடைக்காடு சன சமூக நிலைய செயலாளராக செயல்பட்டபோது சன சமூக செயற்குழு தீர்மானித்தது, அச் சமயத்தில் பத்தைமேனி- இடைக்காடு கிராம சேவக பிரிவிற்கான பொதுச் சுகாதாரப் பரிசோதகராக PUBLIC HEALTH INSPECTOR கதிரிப்பாயைச் சேர்ந்த பிறைசூடி அவர்கள் ( அவரின் இயற்பெயர் கந்தையா என நினைக்கிறேன்). நியமிக்கப் பட்டார். அச்சுவேலி பகுதிக்கு அச்சுவேலியை சேர்ந்த பிரத்தியோக வகுப்புக்களை நடாத்தும் சத்தியமூர்த்தி ஆசிரியரின் சகோதரர் அவரின் பெயர் வேதமூர்த்தி என நினைக்கிறேன் .எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. பொது சுகாதார பரிசோதகர் வேதமூர்த்தி அவர்கள் அச்சுவேலிப் பகுதிக்கு கடமையாற்றினாலும் இடைக்காட்டிற்கும் பெரிதும் உதவிசெய்திருக்கிறார் , திரு பிறைசூடி அவர்கள் மிகவும் எளிமையானவராகவும் பழகுவதற்கு இனிமையானவராகவும், உயர்ந்த கம்பீரமான தோற்றமும் கடமையுணர்வும் கொண்டவராக இருந்தார். அதுமட்டுமன்றி பக்கத்தூரான கதிரிப்பாயை அவரது வாழ்விடமாகவும், அக்கிராமத்திற்கே சேவையாற்றும் வாய்ப்பும் கிடைத்தமை எமக்கும் சாதகமாக அமைந்தது. கடமை நிமித்தம் அவர் அடிக்கடி இடைக்காட்டிற்கு வருகை தருவதுடன் சன சமூக நிலையத்திற்கும் வந்து எம்முடன் உரையாடுவது வழக்கம். காலையில் அச்சுவேலிக்குச் சென்று மரக்கறி வாங்கினாலும் வாழைப்பழம் வாங்க இடைக்காட்டிற்குத் தான் வருவார்.
அவருடன் நாம் இது பற்றி கலந்துரையாடினோம். எனது சகோதரர் மருத்துவர் கந்தசாமி அவர்கள் இந்த விடயத்தில் தனது அனுபவங்களை எமக்கு ஆலோசனைகளாக வழங்கினார், அவர் கண்டாவளை அரசினர் மருந்தகத்தில் கடமையாற்றியபோது வாரத்தில் இரு நாட்கள் முரசுமோட்டைக்கும் ,கல்வெட்டித் திடலுக்கும் மதியத்திற்குப் பின் சென்று சிகிச்சை அளிப்பது வழக்கம் ,அதனை தரிசிக்கும் மருந்தகம் VISITING DISPENSARY என்பர். நான் அதனை பிறைசூடி அவர்களுடன் கலந்துரையாடும் போது நினைவூட்டினேன், அவர் யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளருக்கு D.H.S ஓர் விண்ணப்பம் ஒன்றை எழுதிக் கொண்டு வருமாறும் ஓர் நாள் அவரை போய் சந்தித்து பேசுவோம் என்றார். நானும் அதற்கிணங்க அவருடன் சென்றேன், அவர் யாழ் மருத்துவ மனையில் கடமையாற்றும் அவரது நண்பரான பிரபல வைத்திய நிபுணருடன் மாவட்ட சுகாதார பணிப்பாளரை சந்தித்து இவ்விடயம் பற்றிய விண்ணப்பத்தைக் கொடுத்தோம். அவர் எல்லா விடயங்களையும் கேட்டுவிட்டு தற்போது அச்சுவேலி கிராமிய மருத்துவமனையில் உதவி மருத்துவ அதிகாரி APPOTHECARY ஒருவரே பணியாற்றுவதாகவும் அதனால் இது இப்போதைக்கு சரிவராது எனவும் கூறினார். எனினும் கூடிய விரைவில் புதிதாக மருத்துவ கற்கைநெறியை முடிக்கின்ற மருத்துவர் ஒருவரை நிரந்தர மருத்துவராக நியமனம் செய்வோம் அப்போது இடைக்காட்டிற்கான தரிசிக்கும் மருத்துவ சேவையை தொடங்க முடியும் என்றார், நாமும் அவ் வேளைக்காக காத்திருந்தோம்,
1976 ல் அச்சுவேலி கிராமிய வைத்திய சாலைக்கு திரு இமையகாந்தன் அவர்கள் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார், அவர் மருத்துவ கற்கைநெறியை முடித்து யாழ் மருத்துவமனையில் உள்ளக சேவையை நிறைவு செய்தபின் தனது முதல் நியமனமாக அச்சுவேலியில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்,. அச்சமயத்தில் மீண்டும் பொது சுகாதார பரிசோதரரான பிறைசூடி அவர்களும் அச்சுவேலி பொது சுகாதார பரிசோதகர் வேதமூர்த்தி அவர்களுமாக யாழ் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு முன்னைய விடயங்களை நினைவு படுத்தியதுடன் அச்சுவேலி மருத்துவ அதிகாரியான திரு இமையகாந்தன் அவர்களின் ஒப்புதலையும் பெற்றுக் கொண்டனர். மருத்துவர் இமையகாந்தன் அவர்கள் இளமையானவராகவும் துடிப்புள்ள இளைஞராகவும் முதல் நியமனம் என்பதாலும் மிகுந்த உற்சாகத்துடன் எமக்கு உதவியாக செயல்பட்டார்.
1976 ல் அப்போதை சனசமூக நிலைய செயற்குழுத் தலைவர் திரு மா,யோகராசா. செயலாளர் திரு சி, சண்முகராசாவுடன் இணைந்ததான செயற்குழுவுடன் திரு சு.இ.கந்தசாமி அவர்களும் சென்று அச்சுவேலி மருத்துவ அதிகாரி திரு இமையகாந்தன் அவர்களுடனான தொடர்புகளை சரிவர மேற்கொண்டு அதற்கான செயற்பாட்டினை திறம்பட முன்னெடுத்து அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தனர்., அச்சுவேலி மருத்துவ அதிகாரி திரு இமையகாந்தன் அவர்களும் இடைக்காட்டில் வாரம் ஒருமுறை வருகை தந்து மருத்துவ சேவையை வழங்க ஒப்புதல் அளித்தார்.
இப்போது எமக்கு சிகிச்சை அறையொன்றின் தேவை உணரப்பட்டது, அதே சமயம் சனசமூக நிலையத்தின் 25 வது ஆண்டு நிறைவும் நெருங்கியது, எனவே அப்போதைய செயற்குழு பொதுக் கூட்டமொன்றைக் கூட்டி பொதுக்குழுவின் அங்கீகாரத்துடன் நிலையத்துடன் இணைந்ததாக நிலையத்தின் வடபுறத்தில் ஓர் அறையொன்றினை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது, இக் கட்டிட்த்தை அமைப்பதற்கு அச்சுவேலி பலநோக்க கூட்டுறவு சங்க சமாசத்தின் முகாமையாளர்களாக இருந்த குழந்தைவேலு, குகதாசன் ஆகியோரின் அனுசரணை எமக்கு தேவைப்பட்டது அதனை அங்கு கடமையாற்றும் எம்மவரான சிதம்பரப்பிள்ளை நடராசா கணக்காளர் அவர்கள் பெற்றுத் தந்ததை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.. உடனடியாகவே வேலைகள் ஆரம்பித்து மிக குறைந்த நாட்களில் ( 22 நாட்கள் என நினைக்கிறேன்) அறை ஒன்றும் அதனுடன் இணைந்ததாக இளைப்பாறும் இடமொன்றும் அமைத்து முடிக்கப்பட்டது இதற்கான நிதித் தேவையை முழு இடைக்காட்டு மக்களும் தங்களின் விளைபொருளான வெண்காயத்தை தந்ததன் மூலம் நிறைவு செய்ய முடிந்தது, அவ் வெண்காயத்தினை சேகரித்து கொண்டு வந்து நிலையத்தில் சேர்ப்பதற்கு இரு சக்கர உழவு இயந்திரம் வைத்திருக்கும் என் இளைஞர்களும் உதவினர், அதுமட்டுமின்றி அவ் வெண்காயத்தினை துப்பரவு செய்து கொழும்பிற்கு அனுப்பி சந்தைப்படுத்தலிலும் எம் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு மறக்கமுடியாத தொன்றாகும்,
இக் கட்டிடத்தை மிகக் குறுகிய நாட்களில் அமைப்பதற்கு சன சமூக நிலைய இளைஞர்களின் அர்ப்பணிப்பான உதவிகளும் , இருசக்கர உழவு இயந்திரம் வைத்திருக்கும் அன்பர்களின் உதவியும் எமக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது. மறைந்த க. சரவணமுத்து, கிணற்றம்புலம் க, செல்லத்துரை குடும்பம் (இரத்தினம் ) போன்றவர்களின் பங்களிப்பும் மறக்க முடியாதவையே, மருத்துவர் திரு இமையகாந்தன் அவர்களினால் பொதுச் சுகாதார பரிசோதகர் பிறைசூடி மருத்துவமாது மறைந்த இராசமணி மற்றுமொரு மருத்துவமாது ஆகியோர்களின் முன்னிலையில் இந்த வெள்ளிவிழா மண்டபம் மிகவும் சிறப்பாக இசை நிகழ்வுகளுடன் திறந்துவைக்கப்பட்டு வாரத்தில் புதன்கிழமைதோறும் மருத்துவர் ஓர் மருந்தாளர் வளலாயில் வசிக்கும் மருத்துவமாது இராசமணி அவர்களுடன் இன்னுமொரு மருத்துவமாதுவும் சேர்ந்து திறம்பட செயல்படுத்தி வந்தனர், குறிப்பாக முதியோர், மற்றும் கற்பிணிகளுக்கான பரிசோதனைகள், தாய் சேய் நலன் பேணல் என்பன சிறப்பாக நடைபெற்றன.அந்த அறைக்கான யன்னல் திரைச்சிலைகளும், மறைப்பு தடுப்பக்களையும், மற்றும் சில உபகரணங்களையும் வாங்க வேண்டியிருந்தது, அந்த பொறுப்பினை செயற்குழு என்னிடம் ஒப்படைத்தது, நானும் அதனை மகிழ்வுடன் செய்து கொடுத்தேன், இதற்கான படுக்கை வசதிகளை வைரம் நண்பர்கள் வழங்கி உதவினர், சன சமூக நிலைய உறுப்பினர்கள் வருகைதரும் மருத்துவ குழுவினருக்கான உதவிகளையும் அவர்களுக்கான தேநீர் சிற்றுண்டி வகைகளையும் வழங்கி உதவினார்கள், மருத்துவமாது இராசமணி அவர்கள் மிகவும் அர்ப்பணிப்பான சேவைகளை வழங்கி உதவியபோதும் அவர் மிக இளவயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறைபதமடைந்தமை எமக்கு மிகுந்த மனவருத்தையளித்தது.
இவ்மருத்துவ சேவையை தம்பாலை ,கதிரிப்பாய், வருணன் ,இடைக்காடு, வளலாய் மக்கள் பெற்று பெரும் பயனடைந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாகும்,