வாக்குவாதம், விவாதங்கள் என்றால் என்ன ? வாக்குவாதம், விவாதத்தில் வெற்றி கொள்ளலாமா ? அதற்கு என்ன வழி!!

By மகேசன் on April 28, 2022

Card image cap

வாக்குவாதம், விவாதங்கள் என்றால் என்ன ? வாக்குவாதம், விவாதத்தில் வெற்றி கொள்ளலாமா ? அதற்கு என்ன வழி!!

உறவுகளே !!

covid-19 இல் இருந்து உலக மக்கள் மெல்ல மெல்ல வெற்றி கொண்டு வரும் வேளையிலே,

‘’ கச்சிதமாக திட்டமிட்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்’’,

முதலிலே வாதங்கள் பற்றி பார்ப்போம் உலகத்திலே உள்ள வாதங்கள் 82 வகைகள் ஆகும் .

அதனை மூன்றாக பிரிக்கலாம்.

உடலிலே வருவது

மனதிலே வருவது

வார்த்தையிலே வருவது

வாதம் என்ற பொருள் ஒரு உடலையோ அல்லது மனதையோ அல்லது வார்த்தையோ முடக்கிவிடும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தவிர்க்க வேண்டியது.

சரி இனி வாதங்களை பார்ப்போம். உடலிலே வரும் வாதம் 80. இதற்கு மருந்துகள் உண்டு. இதை மருந்தால் மாற்றலாம். அடுத்து மனதிலே வரும் வாதம். இதை எண்ணத்தால் மாற்றலாம். அடுத்து வார்த்தையிலே வரும் வாதம். இதை வாக்குவாதம் என்பர். 81 வாதங்களை விடுத்து வாக்குவாதத்தை பார்ப்போம்.

சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள் கண், காது, பல் எல்லாவற்றுக்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள்., ஆனால் நாக்குக்கு வைத்தியர்கள் இல்லை. அதேபோல் ஒரு விபத்தில் கண்கள் போகும், காது போகும், கை கால் உடையும் ஆனால் நாக்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த இரண்டு உதாரணங்களில் இருந்து இந்த நாக்கின் வலிமை புரியும். அப்படியானால் இந்த நாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். வார்த்தை வலிமை மிக்கது.

சரி ,இனி வாக்கு வாதங்களை பார்ப்போம், சிலரை வாக்குவாதம் செய்பவர்கள் என்றே அழைக்கலாம். அவர்களின் பேச்சிலும் செயலிலும் புரியும். வாக்குவாதங்கள், விவாதங்களை தடுப்பதன் மூலம் கவலை, கோபம் என்பனவற்றை தடுத்துவிடலாம். விவாதங்கள் வாக்குவாதங்கள் என்பதை வெல்வதற்கு அதற்கு ஒரே ஒரு வழி, அதை தவிர்ப்பது தான். விவாதம் என்ற சொல்லை நீங்கள் ஒரு பொழுதும் வெல்ல முடியாது. நீங்கள் வென்றாலும் தோல்வி அடைவீர்கள். தோற்றாலும் தோல்வி அடைவீர்கள். ஒரு விவாதத்தில் வெற்றி பெற்று ஒரு நண்பரையோ, ஒரு பதவியையோ,ஒரு சலுகைகளையோ இழந்து விட்டால் அதை நீங்கள் எப்படி வெற்றி என்ற இடத்தில் சேர்ப்பது?!.

விவாதித்தல் என்பது கல்லின் மேலே பயிர் செய்வது போன்றது. அல்லது தோற்கப் போகும் போர்க்களத்தில் சண்டை போடுவது போன்றது. வெற்றி பெற்றாலும் வார்த்தை பிரயோகங்கள் மன வெறுப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

இதற்கு நான் எனக்கு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு ஆப்கானிஸ்தான் நண்பனின் வீட்டுக்கு ஒரு கொண்டாட்டத்துக்கு போயிருந்தேன். அங்கே பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பொருளியலாளர்கள் போன்றோரும் வந்து இருந்தனர் அப்போது அங்கே ஒருவர் கதையைக் கூற நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னார் அமெரிக்காவில் ஒரே ஒருவர் தான் மூன்று தடவை ஜனாதிபதி பதவி வகித்தவர் என்று, அவரின் பெயரை இவர் மாற்றி கூறுகிறார் என்று எனக்கு தெரியும்., எப்படி இப்படித்தான்…..

வளலாய் ராஜகோபால் ஆசிரியர்(அரியகுட்டி ராஜகோபால்) இவர் என்னிடம் நன்றாக பழகியவர். எங்கள் வீட்டில் சில நேரங்களில் தங்கியிருப்பார். அப்பொழுது உலக நாட்டு கதைகள், முதலாம் உலக மகாயுத்தம், இரண்டாம் உலக மகா யுத்தம், நாட்டின் சரித்திரங்கள் என்பனவற்றை இரவில் தூங்கும் போது எனக்கு கூறுவர். அப்பொழுது அவர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. அமெரிக்கா சரித்திரத்தில் மூன்று தடவை ஜனாதிபதியாக வந்தவர் ஒருவர்தான் அவர்தான் தியோடர் ரூஸ்வெல்ட். இவர் சக்கர நாற்காலியிலிருந்து ஆட்சி செய்தவர் என்பதை ராஜகோபால் ஆசிரியர் சொன்னார்.

அப்பொழுது மனம் எத்தனித்தது குறுக்கிட்டு விவாதித்து அவருக்கு உண்மையை கூறிவிட்டால் என்ன என்று,. ஆனால் நான் அதை தவிர்த்துக் கொண்டேன். ஏன் ஒரு கொண்டாட்டத்திற்கு வந்து மனக் கசப்புடன் செல்வதா என்ற மனப்பான்மை எனக்கு வந்தது. ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயம் இது. வாக்குவாதத்தில் வென்றாலும் தோல்விதான். தோற்றாலும் தோல்விதான். என் எதிர் பேச்சினால் மரியாதையை, நன்மதிப்பை, போன்றவற்றை நான் அவரிடம் இருந்து இழந்து விடுவேன். இது உணர்ச்சிப் போராட்டம் ஒரு தீமையே விட்டுச்செல்லும்.

வாக்குவாதம் செய்பவர்கள் தாங்கள் சொல்வதே சரி என்று எண்ணுவார்கள். இது ஒரு சுயமரியாதை அற்ற நிலைக்கு கொண்டு செல்லும். விவாதம் என்றால் நான் என்ற அதிகாரத்தின் வெளிப்பாடு. இது சண்டையிலும் சச்சரவிலும் தான் முடியும். எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வதை விட அவனுடன் வாக்குவாதம் செய்பவனே அவனை விட முட்டாள்.

நீங்கள் வாக்குவாதம் செய்ய உங்களது நண்பர்கள், உறவினர்கள் எண்ணிக்கையை குறைத்து கொள்வீர்கள்.

வாக்குவாதம் சத்தத்தை எழுப்பும், கலந்து பேசுதல் மன அமைதியைத் தரும்.
வாக்குவாதம் ஆணவத்தின் வெளிப்பாடு, கலந்து பேசுதல் திறந்த மனதில் இருந்து வருவது.
வாக்குவாதம் என்பது தெரியாமை
கலந்து பேசுதல் அறிவை பரிமாற்றம் செய்து கொள்வது.
வாக்குவாதம் என்பது ஆவேசத்தின் வெளிப்பாடு, கலந்து பேசுதல் என்பது ஒரு காரியத்தை வெற்றி கொள்ள செய்வது.
ஒரு வாக்குவாதம் நான் சொல்வது சரி என்று நிரூபிக்க முயற்சிக்கின்றது, கலந்து பேசுதல் எது சரி என்பதை நிரூபிக்கின்றது.
கலந்து பேசுதல் என்றால் மற்றவரின் குறுக்கீடு இல்லாமல் அனுமதித்தல் வேண்டும்.

பொது இடங்களில் நாங்கள் பேசுவதற்கு ஆன வழிகள்

வெளிப்படையான எண்ணத்துடன் இருங்கள்.
எவருடனும் வாக்குவாதம் செய்யாதிருங்கள்.
நல்ல விடயங்களில் குறுக்கிடாதீர்கள்.
உங்களது கருத்தை சொல்வதற்கு முதல் மற்றவர்களின் கருத்தையும் உள் வாங்குங்கள்.
உண்மைகளை வெளியில் கொண்டு வருவதற்காக கேள்விகளை கேளுங்கள் இது மற்றவர்களுக்கு நன்மை தரும்.
மிகைப்படுத்தி எதையும் கூறாதீர்கள்.
எல்லோருடனும் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
மன்னித்துக் கொள்ள தயாராக இருங்கள்.
சிறிய பிரச்சினைகளை விட்டு கொடுங்கள் ஆனால் கொள்கைகளை அல்ல.
எதையும் கௌரவப் பிரச்சனையாக்கி உங்களை மழுங்கடித்து கொள்ளாதீர்கள்.
உங்களது எதிரியையும் உங்கள் வயப்படுத்தி அவரின் மனம் புண்படாமல் அவரையும் உங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளுங்கள்.
எதிரியையும் நண்பன் ஆக்கிவிட்டால் நட்டம் லாபமாக மாறிவிடும்.

எதுவுமே நடக்கவில்லை என்றால் அமைதியாகவும் மென்மையாகவும் அடக்கமாகவும் விவாதங்கள் வாக்குவாதங்களில் இருந்து ஒதுங்கிக் கொள்வது நல்லது.

இப்படிக்கு மகேசனின்

நன்றி!!