By நா.இ.ஈசுவரன். on April 7, 2022
நீத்தார் பெருமை
அமரர் வேலுப்பிள்ளை சுவாமிநாதன்
அமரர் சுவாமிநாதன் அவர்கள் எனக்கு மைத்துணர் முறையானவர். எனது தந்தையாரின் சகோதரியின் மகனாவார். அமரர்களான வேலுப்பிள்ளை – சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து
கல்வி கற்று, இந்தியாவில் பொறியியல் துறையில் மின் பொறியிலாளராக தனது கடமையை ஆரம்பித்தார். சிறு வயதிலேயே தங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்புடன் தன் குடுப்பத்தை பேணிக்காத்து வருபவராக வாழ்ந்து வந்துள்ளார் என்று எனது தந்தையார் எப்போதும் பெருமையுடன் கூறுவார். எனது பெற்றோரின் மீது அளவு கடந்த பாசமுள்ளவர். எந்த கருமத்தைத் தொடங்கினாலும் எனது தந்தையாரை அக் காரியங்களில் முன்நிறுத்தத் தவறுவதில்லை. தனது உறவுமுறையான அருளம்மா என்பவரை திருமணம் செய்த போதிலும் தன் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மனைவியின் ஊரான ஒட்டுசுட்டானில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டில் வாழாது இடைக்காட்டிலே வாழ்ந்து மறைந்துள்ளார்.
இளவயதில் கணவரை இழந்த இரு சகோதரிகளின் குடும்பத்தை, அவர்களின் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து கல்வி அறிவூட்டி அவர்களுக்கான குடும்ப வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்துள்ளமையை எனது தந்தையார் எப்போதும் பெருமையுடன் எமக்குக் கூறுவார். அவருக்கு ஓர் நல்ல மனைவியாக அருளம்மா அவர்களும் வாழ்ந்து அவருக்கு முன்பே இறையடி சேர்ந்து விட்டார். பிள்ளைகள் மூவரும் நல்ல முறையில் புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். சுவாமிநாதன் அவர்கள் பிள்ளைகள் இருக்கும் நாடுகளுக்குச் சென்று சிலகாலம் அவர்களுடன் வாழ்ந்து இறுதிக் காலத்தில் தன் சொந்த வீட்டில் வாழ்ந்து அங்கேயே தான் இறக்க வேண்டும் என்னும் விருப்புடன் அவ்வாறே வாழ்ந்து இறையடி சேர்ந்து விட்டார்.
அவர் மிகுந்த இறைபக்தி மிக்கவர். தனது மனைவியுடன் இந்தியாவிலுள்ள பெரும்பாலான திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபாடு செய்ததுடன் முக்கிய தலங்களான திருக் கைலாசம், அமர்நாத், கேதார்நாத், பத்திரிநாத் ,காசி போன்ற தலங்களுக்குச் சென்றதுடன் தனது பேரப் பிள்ளைகளுக்கும் அத்தலங்களின் பெயரைச் சூட்டியுள்ளார்.
சரியான பராமரிப்பின்றி இருந்த இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தை பொறுப்பெடுத்து அறங்காவல் சபை ஒன்றை அமைத்து அதனை மிகத் திறம்பட உருவாக்கியுள்ளார். அது மட்டுமல்ல இடைக்காடு காசி விஸ்வநாதர் ஆலயம், காக்கைவளவு பெரியதம்பிரான் ஆலயம் , ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலயத்திற்கும் பெருமளவு பங்களிப்பினை நல்கியுள்ளார். இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலய முன்றலிலும், ஒட்டுசுட்டான் ஆலய முன்றலிலும் பிரயாணிகள் நிழற்குடைகளையும் அமைத்துள்ளார். பாடசாலை மாதர்சங்கம் என்பவற்றிற்கான பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். குறிப்பாக இடைக்காடு மகா வித்தியாலய பொன்விழா , பழைய மாணவர் சங்க வெள்ளிவிழா நிகழ்வுகளின்போது அவர் பலசிறந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு மக்களுக்கு மகிழ்வூட்டியமையை மறக்க முடியாது. இடைக்காட்டில் முதன் முதலாக பாரதி கழகத்தை ஆரம்பித்து ,அந்த அமைப்பின் மூலம் 3 நாட்கள் திருக்குறள் மகாநாட்டை நடாத்தியமை இன்றும் மக்கள் மனங்களில் நிறைந்து இருக்கின்றது,
நாட்டில் இடம் பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது மக்களுக்கான பல்வேறு உதவிகளை வழங்கியமை. லயன் கிளப் மூலம் உணவுப் பொருட்களை வழங்கியமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஊரைவிட்டு மக்கள் இடம்பெயர்ந்த போது அவர் கொழும்பில் தங்கியிருந்தாலும் எமதூரிலுள்ள கஸ்டப்பட்ட மக்களுக்கான உதவித்தொகையை பலருக்கு வழங்கியுள்ளார். ஒருமுறை நான் கொழும்பு சென்றபோது என்னிடம் எம்மூர் மக்கள் சிலருக்கான உதவித் தொகைகளைத் தந்து விட்டார். தனது பெயரைக் குறிப்பிடாது கொழும்பிலுள்ள அன்பர் ஒருவர் தந்ததாக கூறுமாறும் அவர் என்னிடம் சொன்னார்.
மனைவியை இழந்து தள்ளாத வயதிலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் கும்பாபிசேகத்திற்கு பெரும் நிதியை வழங்கியதுடன் அந் நிகழ்விலும் முச்சகர வண்டியில் வந்து சில நாட்கள் பங்கு பற்றியிருந்தார். இவ்வாறு பரந்து பட்ட நற் பணிகளைச் செய்து வந்த அன்னாரின் மறைவு எமதூருக்கு பேரிழப்பாகும்.
இவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர் ஆற்றிய நற் செயல்கள் மக்கள் மனங்களில் என்றும் நிறைந்து இருப்பார் என்பது திண்ணம்.
ஓம் சாந்தி!, ஓம் சாந்தி!.
நா.இ.ஈசுவரன்.
கனடா.